சென்னை: பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பரனூரில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.28ம் தேதி 1,025 ஆம்னி பேருந்துகளில் 41,000 பயணிகளும், அக்.29ம் தேதி 1,800 ஆம்னி பேருந்துகளில் 72,000 பயணிகளும், அக்.30ம் தேதி 1600 ஆம்னி பேருந்துகளில் 64,000 பயணிகளும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க அரசு எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கைகளுக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவிக்கிறோம். வண்டலூர் முதல் செங்கல்பட்டு டோல்கேட் வரை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள், நுழைவு கட்டணத்தை ரத்து செய்வது, மேலும் பேருந்துகள் உள்ளே வருவதற்கு கூடுதல் சாலைகள் அமைத்தல் ஆகிய ஏற்பாடுகள் மிகவும் முக்கியமாக இருக்கின்றன.
மேலும், செங்கல்பட்டு-பரனூர் டோல்கேட்டிலும் சுங்க கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம் வண்டலூர் முதல் செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம். இது பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும். இதற்கு நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post பண்டிகை கால நெரிசலை தவிர்க்க பரனூர் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.