குமரி: தீபாவளி பண்டிகையையொட்டி மலர் சந்தைகளில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும் விற்பனை களைக்கட்டியுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில், திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூருக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், தீபாவளியையொட்டி பூக்களை வாங்க தோவாளை மலர்சந்தையில் கூட்டம் அலை மோதியது. தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.900க்கும், சில்லறையில் ரூ.1,050க்கும் விற்பனையாகிறது. பிச்சி பூ ரூ.750 லிருந்து ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. மற்ற பூக்கள் வழக்கமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான பூ சந்தையிலும் மலர்கள் விலை உயர்ந்துள்ளன. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,500க்கு விற்பனையாகிறது. ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூ ரூ.1200க்கும், ரூ.500க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி மட்டுமின்றி முகூர்த்த நாட்களும் வருவதால் விலை உயர்வு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மலர் சந்தையில் பூக்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் பல்வேறு பூக்களின் விலை ரூ.50 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. ரூ.150க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.250க்கும், ரூ.1000க்கு விற்ற மல்லிகை ரூ.1500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.800க்கு விற்பனையான முல்லையின் விலை ரூ.1000ஆகவும், ரூ.600ஆக இருந்த ஜாதிப்பூ ரூ.1200க்கும் விற்பனையாகிறது. வழக்கமான கூட்டத்தை விட அதிகமான வாடிக்கையாளர்கள் மலர்களை வாங்க குவிந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தீபாவளி பண்டிகையையொட்டி மலர்கள் விற்பனை அமோகம்: மல்லிகை மற்றும் பிச்சிப்பூ விலை பலமடங்கு உயர்வு appeared first on Dinakaran.