சென்னை: ஆம்னி பேருந்தில் பயணிப்போரிடம் 3 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டை நடத்தப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தாண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் இருக்கைகள் நிரம்பிய நிலையில் இறுதியாக ஆம்னி பேருந்துகளை மக்கள் நாடுகின்றனர்.
இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தும் சில ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டத்திற்கு வசூல் வேட்டை நடத்துவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் கோவைக்கு அமர்ந்து செல்ல ரூ. 1,730 டிக்கெட் கட்டணமும், இதுவே ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 2,090, ஏசி அமர்ந்து செல்ல ரூ. 1,990, ஏசி ஸ்லீப்பர் ரூ. 2,460 என நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் தற்போது ஏசி படுக்கைக்கு ரூ. 3,400 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 3 மடங்கு வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகள் மட்டுமின்றி, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் சுமுக பயணம் மேற்கொள்ளும் வகையில் கட்டண உயர்வின்றி பேருந்துகளை இயக்க அதன் உரிமையாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். தற்போது, சில ஆம்னி பேருந்துகளில் இது போன்ற உச்சபட்ச கட்டணம் என்பது வசூலிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். அதிக வசூலில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூல் வேட்டை: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.