சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 6,27,30,588 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 11.40 லட்சம் பேர் அதிகளவில் உள்ளனர். அதாவது, 3,07,90,791 ஆண் வாக்காளர்கள், 3,19,30,833 பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6,76,133 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் 1,73,230 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று முதல் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம். அலுவலகம் செல்வோர் வசதிக்காக நவம்பர் 16 மற்றும் 17ம் தேதியும், நவம்பர் 23ம் தேதி மற்றும் நவம்பர் 24ம் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 68,154 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். அங்கு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெறும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
வழக்கமாக இளைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க முன்பு வசதி இருந்தது. தற்போது, 17 வயது முடிந்தவுடன் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என ஆண்டுக்கு 4 முறை 17 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு 18 வயது முடிந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உடனடியாக சேர்க்கப்படும். இதேபோன்று 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
விண்ணப்பங்களை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் அளிக்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில் இதுவரை 4.23 கோடி (67.54 சதவீதம்) பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
* ஜனவரியில் இறுதி பட்டியல் வெளியீடு
2024 ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 11 லட்சம். வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கும்போது, வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்கு ரிஜிஸ்டர் தபால் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் 2 அல்லது 3 இடங்களில் உள்ளது. எந்த இடத்தில் உங்கள் பெயர் நீடிக்க வேண்டும் என்று பதில் அளிக்க காலஅவகாசம் வழங்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். வரைவு வாக்காளர் பட்டியல் https://www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும்.
The post வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள்: ஆண்களைவிட 11.40 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகம் appeared first on Dinakaran.