ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள படகு இல்ல ஏரி, கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. இதை சீரமைத்து மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு திகழ்கிறது. ஏற்காட்டின் மையப்பகுதியில் அழகிய ஏரி அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் தோட்டம் மற்றும் அனைத்து பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ள உயரமான மலைகள், ஏரிக்கு வசீகரமான தோற்றத்தை தருகிறது. ஏரியில் சவாரி செய்ய மோட்டார் படகுகள், மிதி படகுகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.
கூடுதலாக, சுற்றுலா பயணிகள் சுயமாக படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது. ஏரியின் கரையில், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரி பூங்கா உள்ளன. குழந்தைகள் சுதந்திரமாக விளையாடலாம் மற்றும் அருகிலுள்ள ஊஞ்சல்களைப் பயன்படுத்தலாம். சீசன் மற்றும் கோடை காலத்தில், ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா என இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இயற்ைக எழில் கொஞ்சும் ஏற்காடு ஏரி, தற்போது உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர், நேரடியாக கலக்கும் நிலையில், துர்நாற்றமும் நோய் தொற்று அபாயமும் உள்ளது. ஏற்காட்டிற்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ஏரியில் படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. ஏற்காட்டின் தனி அடையாளமாக விளங்கும் இந்த ஏரியில், சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அவல நிலையால், சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, தற்போது 75 சதவீதம் ஆகாய தாமரையாலும், செடி கொடிகளாலும் மூடப்பட்டுள்ளது.
இந்த ஏரியின் மூலம், அருகில் இருந்து கிணறுகள் மூலம் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஏரி மாசடைந்துள்ளதால் கழிவுநீர் கலந்த தண்ணீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, ஏரியை தூய்மைப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post மாசடைந்து வரும் ஏற்காடு படகு இல்ல ஏரி: மீட்டெடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.