×
Saravana Stores

போனஸ் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலம் உள்பட 8 உருக்காலைகளில் தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்: பல ஆயிரம் கோடி உற்பத்தி பாதிப்பு; சேலத்தில் மட்டும் ரூ.350 கோடி இழப்பு

சேலம்: ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான செயில் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 5 பெரிய உருக்காலையும், 3 சிறிய உருக்காலையும் என 8 ஆலைகள் இயங்கி வருகிறது. இதில், சேலம், துர்காபூர், பிலாய், பர்ன்பூர் உருக்காலைகளில் மிக அதிகளவு இரும்பு தகடுகள், துருபிடிக்காத இரும்பு சுருள், பாலங்கள் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலைகளில் தற்போது 45,000 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுபோக தற்காலிக தொழிலாளர்கள், ஆலை உற்பத்தி அலகுகளுக்கு ஏற்ப பணியாற்றுகின்றனர்.

இந்த 8 உருக்காலைகளிலும் பணியாற்றும் 45 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக தலா ரூ.45,500 வழங்கும்படி சிஐடியூ, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், பிடிஎஸ், ஏடிபி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. போனஸ் வழங்குவது தொடர்பாக செயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தநிலையில், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் போனசாக ரூ.26,500 செலுத்தப்பட்டது. குறைந்த போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், 13 சதவீத ஊதிய உயர்விற்கான 39 மாத அரியர் தொகை, 10 வருடமாக உயர்த்தப்படாமல் உள்ள வீட்டு வாடகைப்படியை உயர்த்துதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் பணியிட மாறுதல் வழங்குதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் ஸ்டிரைக்கில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினரும் ஈடுபட்டனர்.

இதனால், செயில் நிறுவனத்தின் 8 ஆலைகளிலும் நேற்றைய தினம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், அந்தந்த ஆலைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்காரணமாக நேற்று ஒருநாளில் மட்டும் பல ஆயிரம் கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் உருக்காலையில் சிஐடியூ, தொமுச, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், தொவிமு, பிடிஎஸ், ஏடிபி ஆகிய தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், மொத்தமுள்ள 591 நிரந்தர தொழிலாளர்களில் 96 சதவீதத்தினர் வேலைக்கு செல்லாமல், ஆலையின் 5ஏ கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஸ்டிரைக் காரணமாக சேலம் உருக்காலையில் 4 உற்பத்தி அலகும் இயங்கவில்லை. இதனால், 600 டன் துரு பிடிக்காத பாலங்கள், 900 டன் துருபிடிக்காத சுருள் உற்பத்தி என 1500 டன் இரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.350 கோடி உற்பத்தி இழப்பு ஆலைக்கு ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சங்கத்தினரை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நிறுவன அதிகாரிகள் அழைத்துள்ளனர். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

The post போனஸ் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலம் உள்பட 8 உருக்காலைகளில் தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்: பல ஆயிரம் கோடி உற்பத்தி பாதிப்பு; சேலத்தில் மட்டும் ரூ.350 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : day ,Salem ,SAIL ,Union Government ,Durgapur ,Philai ,Burnpur ,Dinakaran ,
× RELATED வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை...