×
Saravana Stores

நீரிழிவு நோய் மூலம் கால் இழப்புகளை தடுக்க அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம்: அரசாணை வெளியீடு

* ரூ.26 கோடி ஒதுக்கீடு
* 80 லட்சம் நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு

சென்னை: “பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்பதற்கும் நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்கிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ நோய்களை தடுப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மாநிலத்தின் முதன்மையான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுபோன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். 10 கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவிகிதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும்.

தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நீரிழிவு பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. 85 சதவிகித நீரிழிவு தொடர்பான கால் அகற்றல்கள் காலத்தே கண்டறியப்பட்ட நோய் அறிகுறிகள் மற்றும் இடையீட்டுகளின் மூலம் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை ஆகும். பெருகி வரும் இப்பிரச்சினையின் தீவிர தன்மையை கண்டறிந்து இதை களைவதற்கான முன்னெடுப்பாக ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயித்து திட்டமிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்விழப்பு மற்றும் இரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஆரம்ப நிலை இடையீட்டுகளை மேற்கொண்டு கால் இழப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கென ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளது.

மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும் பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலமாகவும் இத்திட்டம் பாத பராமரிப்பு, கால் புண் தவிர்த்தல், கால் புண் மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றது.
பாத மருத்துவ மையங்களை அரசு மருத்துவத்தின் முக்கியமான சேவைகளாக உருவகப்படுத்துவதன் மூலம் மிக எளிய தரப்பினரையும் பாத மருத்துவ சேவைகள் சென்றடைவதை உறுதி செய்வதோடு, எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பாத மருத்துவ தீவிர கவன சிகிச்சையின்றி தவிக்கும் நிலை இருக்கக்கூடாது என்பதையும் அரசு உறுதிசெய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தஞ்சாவூரை பின்பற்றி…
இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி திட்டத்தினுடைய பலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.68 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் 1.65 லட்சம் நபர்களுக்கு பாத பாதிப்பு கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட மாதிரி வெற்றியை தொடர்ந்து மாநில முழுமைக்கும் இத்திட்டம் விரிபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு கோவை கங்கா மருத்துவமனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நீரிழிவு பாத அறுவை மருத்துவம், கால் புண் மருத்துவம் மற்றும் புனரமைப்பு தளங்களில் மேம்பட்ட சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு அரசு மருத்துவக்கல்லூரிகளில் பொது அறுவைதுறை, ஒட்டுறுப்பு அறுவை துறை மற்றும் ரத்தநாள அறுவை துறைகளின் ஒருங்கிணைப்பில் தடையற்ற சேவைகளை வழங்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

The post நீரிழிவு நோய் மூலம் கால் இழப்புகளை தடுக்க அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Podiatry ,Chennai ,Tamil Nadu government ,Podiatry Center in ,Dinakaran ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...