சென்னை: சென்னை விமான நிலையத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகப் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வதற்காக, தனியார் ஒப்பந்ததாரரிடம் விமான நிலைய நிர்வாகம் ஒப்பந்த பணியை விட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 2 என்ற சென்னை சர்வதேச விமான முனையத்தின் 2வது தளத்தின் மேல்பகுதியில், வண்ண விளக்குகளை தொங்கவிடும் பணியில் திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (26) என்ற கூலி தொழிலாளி நேற்று முன்தினம் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பகல் 2.30 மணியளவில் அவர் எதிர்பாராதவிதமாக சுமார் 40 அடி உயரத்திலிருந்து தவறி தரையில் விழுந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செல்வத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தனியார் ஒப்பந்த நிர்வாகிகளிடம் சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற உயரமான கட்டிடத்தில் பணியில் இருக்கும் போது, அந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு கவசமாக தலையில் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அதோடு உயரத்தில், அந்தரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்திருக்க வேண்டும். அதுபோன்ற சேப்டி பெல்ட், ஹெல்மெட் எதுவும் செல்வம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளாக வலைகள் கட்டியிருக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற எந்த விதிமுறைகளையும் அமல்படுத்தாமல், சென்னை விமான நிலையத்தில் இந்த பணிகளில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி உயரத்திலிருந்து விழுந்த கூலி தொழிலாளி பரிதாப பலி: தீபாவளி மின் அலங்காரம் செய்தபோது விபரீதம் appeared first on Dinakaran.