×
Saravana Stores

சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற வனம் அமைக்க டெண்டர் வெளியீடு: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சென்னை மாநகரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நகரமயமாதலின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தொழிற்சாலை கழிவுகள், வாகன புகை போன்றவற்றால் காற்று மாசு அடைவதை காட்டிலும் இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது முக்கிய காரணியாக விளங்குகிறது. அதேபோல், காலநிலைமாற்றத்தால் ஏற்படும் இடர்களை தடுக்க தமிழக அரசு பசுமை தமிழகம் திட்டம் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காடுகளின் வளர்ச்சியை 33 சதவீதம் அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக சென்னையில் மியாவாகி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிறிய காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 10 முதல் 30 மடங்குவரை வேகமாக மரங்களை வளர செய்து சிறிய காடுகளை உருவாக்க முடியும். குறிப்பாக, கோட்டூர்புரம் மற்றும் அடையாறு பகுதிகளில் 2 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. அடையாரில் 2000 செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாரில் நடப்பட்டு உள்ளது.

இதனால், 20 ஆயிரம் சதுர அடிக்கு அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வளசரவாக்கத்தில் 6000 சதுர பரப்பளவில் 45 வகையான 700 செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டுகின்றன. அந்தவகையில், இந்த நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் இணைந்து சிறுசேரி சிப்காட் அருகே ராஜிவ்காந்தி சாலையோரம் 50 ஏக்கரில் புதிய பிரமாண்டமான ‘நகர்ப்புற வனம்’ என்ற சிறிய காட்டை உருவாக்க திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: ‘‘சிறுசேரி சிப்காட் அருகே 50 ஏக்கரில் நகர்புற வனப் பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்திய வனத்துறையால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் சென்னையில் 5.3 சதவீதம் மட்டுமே காடுகளால் சூழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையின் தட்பவெட்ப நிலையை மனதில் வைத்து இந்த சிறிய காட்டை உருவாக்க உள்ளோம். இங்கு வரும் மக்கள் அமர இருக்கைகள், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். இந்த சிறிய வனப்பகுதியை அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதால், விரைவில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்த பின்னர் மக்கள் நகப்புற வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

The post சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற வனம் அமைக்க டெண்டர் வெளியீடு: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Sirusheri ,Tamilnadu Govt ,Chennai ,Tamilnadu government ,
× RELATED மின்வாரியத்தில் தொழில்நுட்ப...