விக்கிரவாண்டி, அக். 29: விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று முன்தினம் மாலை தவெக முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணகான ரசிகர்கள், தொண்டர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். மாலையில் மாநாடு முடிவடைந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் வந்த வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனிடையே நேற்று மதியமே மாநாட்டு திடலுக்கு வந்த ரசிர்கள், தொண்டர்களுக்கு குடிநீர், உணவு வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தாகத்தில் தவித்த அவர்கள் நீண்டதூரம் நடந்து சென்று தாகத்தை போக்கினர்.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாததால், மாநாட்டுக்கு வந்த சிலர் அதை உடைத்து சேதப்படுத்தினர். தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய தொண்டர்கள் போலீசார் மற்றும் பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநாடு முடிந்து அனைவரும் சென்ற பிறகு மாநாட்டு திடலில் இருந்த ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அங்கு பாலிதீன் பைகளும், வாட்டர் பாட்டில் போன்ற குப்பைகளும் குவிந்துள்ளன. மாநாடு நடைபெற்ற இடமே போர்க்களம் போல் காணப்பட்டது. மேலும் வி.சாலை மற்றும் அதன் அருகிலுள்ள பல்வேறு இடங்களிலும் மாநாட்டுக்கு வந்தவர்கள் பயன்படுத்தி தூக்கிப்போட்ட குப்பைகளாலும், சாப்பாட்டு பொட்டலங்களாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மாநாட்டு நடந்த இடத்தில் உள்ள குப்பைகளையும், உடைத்து சேதப்படுத்தப்பட்ட பொருட்களையும் மாநாட்டை நடத்திய தவெக கட்சியினர் இன்னும் அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுள்ளனர்.
The post தவெக மாநாட்டு திடலில் அடித்து நொறுக்கப்பட்ட நாற்காலிகள் appeared first on Dinakaran.