×

மினியேச்சர் ஓவியங்கள்!

 

நன்றி குங்குமம் தோழி

ஓவியக் கலை பலவிதமான நுணுக்கங்களை கொண்டது. ஒரு ஓவியத்தை பார்ப்பவர்கள் அந்த ஓவியத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகளையும் நுணுக்கங்களையுமே பார்ப்பார்கள். பெரிதாக வரையப்படும் ஓவியங்களில் பல நுணுக்கமான விஷயங்களை கொண்டு வரையலாம். ஆனால் சிறிய அளவில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமாக நுணுக்கங்களை கொண்டு வருவது கடினம். அதிலும் இரண்டு சென்டிமீட்டர் அளவேயுள்ள ஓவியங்கள் என்றால் மிகவும் கடினமானது. இந்த வகையான மினியேச்சர் ஓவியங்கள் உட்பட பல வகையான ஓவியங்களையும் மிகவும் அழகாகவும் அதற்குரிய அனைத்து அம்சங்கள் மற்றும் கலைநயத்துடன் வரைந்து வருகிறார் நந்தினி.

‘‘பொள்ளாச்சிதான் என்னோட சொந்த ஊர். முதுகலை பட்டதாரி என்றாலும் தற்போது மேலும் சைக்காலஜியில் முதுகலை படிப்பு படித்து வருகிறேன். எனக்கு நிறைய படிக்க வேண்டும்னு ஆசை. அதே போல் மனசுக்குப் பிடிச்சதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. அதில் கலை சார்ந்த விஷயம் மேல் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் அதிகம். சின்ன வயசில் இருந்தே நான் நல்லா வரைவேன். கண்ணால் பார்ப்பதை அப்படியே வரைந்திடுவேன். நான் வரையும் ஓவியங்கள் மற்றும் அதற்கு நான் வண்ணங்கள் தீட்டும் போது எனக்குள் ஒரு அலாதியான இன்பத்தை கொடுத்தது. அதனாலேயே என் வீடு முழுதும் நான் வரைந்த ஓவியங்கள் கொண்டு அலங்கரிக்கணும்னு நினைச்சேன்.

அப்ப நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அதில் விவேகானந்தர் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அவருடைய பெனாமொழிகளை படித்து அதைக் கொண்ட ஓவியம் ஒன்றை வரைந்தேன். இதை பார்த்த என் பள்ளி தலைமையாசிரியர் பள்ளிக்கூடங்களில் எங்கு வரைய வேண்டும் என்றாலும் என்னை அழைப்பார். மேலும் எனக்கு ஓவியம் வரைவதில் இருந்த ஆர்வத்தைப் பார்த்த என் அப்பா என்னை ஓவியப் பயிற்சியில் ேசர்த்துவிட்டார்.

அப்பாதான் என்னை தினமும் பயிற்சிக்காக அழைத்து செல்வார். நானும் ஒரு வகுப்பு கூட தவறியதில்லை. ஓவிய வகுப்பில் ஓவியங்கள் வரைவது மட்டுமில்லாமல், அதன் அடிப்படை விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தாங்க. நாளாக நான் பார்க்கிற கார்ட்டூன் பொம்மைகள் எல்லாம் வரையத் தொடங்கினேன். அதன் பிறகு நேரில் பார்க்கும் உருவங்களை எல்லாம் வரைய ஆரம்பித்தேன். என்னுடைய ஓவியங்களை பார்த்த என் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவரும் என்னை மேலும் ஓவியத்தில் கவனம் செலுத்த சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. எனக்கு அது பெரிய உத்வேகமா இருந்தது.

தொடர்ந்து நான் புதுப்புது ஐடியாக்களில் வரையத் தொடங்கினேன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீட்டில் எனக்கு திருமணம் முடித்தார்கள். திருமணத்திற்குப் பிறகு என் கணவரின் வீட்டில் என்னுடைய ஓவிய ஆர்வத்தைப் பார்த்து அவர்களும் எனக்கு அதற்கான பயிற்சி எடுக்க உதவினார்கள். மேலும் கல்லூரி படிப்பும் நான் தொடர்ந்து வந்தேன்’’ என்றவர் தான் வரைந்த ஓவியங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.‘‘ஓவியங்கள் என்னை பொறுத்தவரை ஒரு உணர்வை கொடுக்கக்கூடியது. எல்லா ஓவியங்களுக்குள்ளும் உயிர் இருக்கிறது. குழந்தைகள் அல்லது பெரியவர்கள் ஓவியங்கள் வரைந்தாலும் அதில் ஒரு உயிரினை நாம் உணர முடியும். நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் ஓவியங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு வண்ணமும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு.

அதனால் நான் ஒவ்வொரு ஓவியம் வரைந்த பிறகும் அது எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்வேன். சில புது ஓவியங்கள் வரையும் போது, அதனை எப்படி வரையலாம், என்ன வண்ணங்கள் கொடுக்கலாம் என்று என் மனதில் ஒரு வரைபடம் வரைந்த பிறகு அதனை வரைய துவங்குவேன். அதில் சில ஓவியங்களை வரையும் போது என்னென்ன நுணுக்கங்களை கையாளலாம் என்பதை நானே முயற்சி செய்து கற்றுக் கொண்டேன். நான் நேரில் பார்க்கும் காட்சிகளை அப்படியே என் தூரிகையால் கொண்டு வந்திடுவேன். நான் வரைந்த ஓவியங்களை பார்ப்பவர்கள் ஆச்சரியமாகவும் புருவங்களை உயர்த்தியும் பார்க்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்கும்.

ஒவ்வொரு ஓவியம் வரையும் போதும் அதில் நாம் நுணுக்கமாக செய்யக்கூடிய வேலைப்பாடுகள் தான் அந்த ஓவியத்தை மற்றவர்கள் பார்க்கும் போது வியப்பளிக்கும். நிஜமாக இருப்பது போலவே ஒரு கண்ணை வரைய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது. அப்படித்தான் கண் ஒன்றை வரைந்தேன். பார்க்கும் போது நிஜமான கண்ணைப் பார்ப்பது போல் இருக்கும். என் ஓவியங்கள் தனித்தன்மையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த வகையில மினியேச்சர் எனச் சொல்லக்கூடிய சிறிய ஓவியங்களை வரைய துவங்கினேன்.

இரண்டு சென்டிமீட்டருக்கும் குறைவா இருக்கிற ஓவியங்கள்தான் மினியேச்சர் ஓவியங்கள். இந்த ஓவியங்களை உருவமாக கொண்டு வருவதும் மிகவும் சிரமம். அதே நேரத்தில் அதில் அனைத்து விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாக செய்ய வேண்டும். இது போன்ற மினியேச்சர் ஓவியங்கள் வரைய அதிக நேரம் எடுக்கும். எனக்கு அந்த ஓவியங்களை வரைவது மிகவும் சவாலாக இருந்தது. அந்த காரணத்தாலேயே அந்த மாதிரியான ஓவியங்களை வரைய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் மினியேச்சர் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைவது குறித்தும் பயிற்சி அளித்து வருகிறேன். அடுத்து 3டி மற்றும் சுவர் ஓவியங்கள் வரைய வேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்கிறார்  நந்தினி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post மினியேச்சர் ஓவியங்கள்! appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,Dinakaran ,
× RELATED நன்றி தெரிவிக்கும் தின அணிவகுப்பு.....