விக்கிரவாண்டி: தவெகவின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற பெயரில் நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க. கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து பேசியதாவது: சமத்துவம், சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வர்க்கம், பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள், பெண்கள். 3ம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மக்களுக்கு சமமானவர்களே.
மதசார்பின்மை, மதசார்பற்ற, தனிப்பட்ட மதநம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும், மத நம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு, ஆட்சி, நிர்வாகம் தான் நம்முடைய மதசார்பின்மை கொள்கை. மாநில தன்னாட்சி உரிமையே அந்தந்த மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது த.வெ.க.வின் தன்னாட்சி கொள்கை.
தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழி கொள்கையை த.வெ.க. பின்பற்றுகிறது.
தமிழே ஆட்சி மொழி. தமிழே வழக்காடு மொழி. தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழி கொள்கைக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் துறை எந்த துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம். போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல் அடிப்படை கொள்கைகளாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைதொடர்ந்து கட்சியின் செயல்திட்டங்களை நிர்வாகி கேத்ரின் பாண்டியன் கூறியதாவது: நிர்வாக சீர்திருத்தம் அரசு மற்றும் தனியார் துறை எதுவாகிலும் அதில் அரசியல் தலையீடு எவ்வகையிலும், எந்த வடிவிலும் இருக்கவே கூடாது.
அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடனும் பன்முகத்தன்மையுடனும் விளங்கும். எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைபடுத்தப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக இருப்பதால் ஆளுநர் பதவி தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். சமதர்ம சமத்துவ கோட்பாட்டுக்கும், சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post இருமொழிதான், ஆளுநர் வேண்டாம் தவெக கொள்கைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.