சென்னை: காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்றும், யார் கல் எறிந்தாலும் தாங்கிக் கொள்கிற சக்தி திமுகவிற்கு உள்ளது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் குடும்பத்தில் அனைத்து ஆண்களும் ஒரு சமயத்தில் சிறைக்கு சென்றார்கள். ஸ்டாலின், செல்வம், கலைஞர், அழகிரி, மாறன் என அனைவரும் சிறைக்கு சென்றனர். அப்போது கலைஞர் சொன்னார் ‘என் வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள், ஆண்கள் சிறைக்கு சென்றுள்ளனர்’ என்றார். அப்படிபட்ட தியாகம் செய்தது கலைஞர் குடும்பம். இந்த குடும்பத்தை பற்றி சிலர் அவதூறாக பேசுகிறார்கள் என்றார்.
நிகழ்ச்சிக்கு பின் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் குறித்து கவர்னரில் இருந்து நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். எங்களுடைய கட்சி ஆலமரத்திற்கு சமமானது. காய்த்த மரம்தான் கல்லடி பட வேண்டும். ஆகவே இந்த ஆலமரம் என்பது பல பேர் கல்லெறிந்தாலும் தாங்கிக் கொள்கிற சக்தி எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post காய்த்த மரம்தான் கல்லடிபடும் யார் கல் எறிந்தாலும் தாங்கும் சக்தி திமுகவிற்கு உள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.