சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி வருகிறது. இன்னும் 3 நாட்களில் பண்டிகை வருவதால் அதற்கான புத்தாடைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தி.நகர் வருவதாக இருந்தால், மின்சார ரயிலில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வார்கள். அதேபோல, வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்திலும் இறங்கி எம்.சி.ரோடுக்கு சென்றூ ஷாப்பிங் செய்வார்கள். சிலர் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி வண்ணாரப்பேட்டைக்கும், சவுகார்பேட்டைக்கும் செல்வார்கள்.
ஆனால், நேற்றைய தினம் கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் கடற்கரை முதல் பூங்கா ரயில் நிலையம் இடையே அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை, வழக்கமாக இயக்கப்படும் 60 மின்சார ரயில்கள் ரத்து செய்து, அதற்கான அறிவிப்பையும் சென்னை ரயில்வே கோட்டம் திடீரென வெளியிட்டது. இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை கடற்கரை-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், திடீரென 60 மின்சார ரயில்களை ரத்து செய்தது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. இதனால், தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பொதுமக்கள் கடும் நெரிசலுக்கு ஆளானார்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. எனவே, மாநகர பேருந்துகளை நாடி சென்றனர். அதனால், பேருந்துகளிலும் உள்ளே ஏற முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாக இருந்தது.
மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு ஆளாகினர். அலைச்சலுக்கு உள்ளான பொதுமக்கள் கூறும்போது, பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் செய்திருக்கலாம், அல்லது பண்டிகை முடிந்தபிறகாவது செய்திருக்கலாம். கூடுதல் மின்சார ரயில்களை இயக்குவார்கள் என்று பார்த்தால், இருக்கிற ரயில்களையும் ரத்து செய்துவிட்டார்கள் என்று ஆதங்கத்துடன் மக்கள் தெரிவித்தனர்.
The post 60 மின்சார ரயில்கள் ரத்து: பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்: ஷாப்பிங் சென்ற மக்கள் அவதி appeared first on Dinakaran.