சென்னை: திமுக விளையாட்டி மேம்பாட்டி அணி காவேரி மருத்துவமனை இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பைக்கத்தான் பேரணியை சென்னையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தன. 250 பைக் ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த பேரணி வடபழனி காவேரி மருத்துவமனையிலிருந்து துவங்கி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நிறைவடைந்தது.
மகளிர் பைக் ஆர்வலர்களால் மிகப்பெரிய ரிப்பன் உருவாக்கப்பட்டு ஆசியா சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெறச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 30 வயதை கடந்த பெண்கள் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு சார்பில் கடந்த ஆண்டு 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 117 பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது.
இந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த புற்றுநோய் பரிசோதனை மையம் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 6 மாதத்திற்குள் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்படும்.
புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு அழைப்பு விடுத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர். பரிசோதனை செய்துகொண்டால்தான் புற்றுநோய் சிகிச்சை அளித்து தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் , எம்எல்ஏக்கள் காரம்பாக்கம் கணபதி, அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் நிவேதா ஜெசிக்கா, புற்றுநோயியல் இயக்குனர் வைத்தீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, காவேரி மருத்துவமனை இணைந்து மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி சாதனை appeared first on Dinakaran.