சென்னை: நெசவுக்கூலி உயர்த்தப்பட்ட நிலையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது; அர்த்தமில்லாதது என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியாத்தம் பகுதியில், 34 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் பல வகையான லுங்கி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், கூட்டுறவு நெசவாளர்களுக்கு, ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்த நெசவுக்கூலி ரூ.1742 வழங்கப்பட்டு வருகிறது. இந்த லுங்கி ரகங்களுக்கு எதிர்வரும் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளின் பொருட்டு வெளிச்சந்தையில் விற்பனை வரவேற்பு அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டும், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றும், கூடுதல் ஊக்க தொகையாக ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்தம் ரூ.360 வழங்கி, மொத்த நெசவுக் கூலி ரூ.2102 என கைத்தறி நெசவார் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் அனுமதி அளித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நெசவு கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தேவையில்லாததும், அர்த்தமற்றதும் ஆகும்.
கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி நெசவு தொழில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் அவ்வப்போது அடிப்படைக்கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும், கூலி உயர்வு தொடர்ந்து வழங்கி வருகின்றன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த 405 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1033 நிரந்தர பணியாளர்களுக்கு 31.05.2022 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அயல் பணியில் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் செயலாட்சியர்களாக, பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களின் ஊதியத்தினை அரசே வழங்க அரசாணை வெளியிடப்பட்டு, இவர்களின் ஊதியத்தை அரசே ஏற்று வழங்கி வருகிறது. இதனால், சங்கங்களின் நிதிச்சுமை குறைக்கப்பட்டு லாபத்தில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்கள் உள்பட ரூ.1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள். அவற்றில், 84,526 கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் இணைக்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தினை, ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,300 கோடி செலவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோல் கைத்தறி நெசவுத் தொழிலையும், கைத்தறி நெசவாளர்களையும் பாதுகாப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எவ்வித கொள்கையும், கோட்பாடும் இல்லாத வகையில், சுய லாபம் மற்றும் வெற்று விளம்பரத்திற்காக இவ்வாறான மலிவான அரசியலில் ஈடுபடுவதை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post நெசவுக்கூலி உயர்த்தப்பட்ட நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது; அர்த்தமில்லாதது: எடப்பாடிக்கு அமைச்சர் காந்தி பதிலடி appeared first on Dinakaran.