சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரும் மழைக்காலங்களையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கடந்த 14, 15, 16ம் தேதி பெய்த மழையின் போது மழை நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சியில் பணியாற்ற 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இரவு, பகலாக சிறப்பாக பணிசெய்தீர்கள். அவ்வளவு மழைநீரும் சில மணி நேரங்களிலேயே வடிந்து சென்றது. சில பகுதிகளில் மோட்டார் வைத்து நீர் அகற்றப்பட்டது. சில மணிநேரங்களிலேயே பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.
அடுத்த நாட்களில் மழை பெய்த சுவடு கூட தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பரில்தான் தீவிர மழைக்காலம் ஆரம்பமாகும். 14ம் தேதி இரவு, பருவமழையினால் நாராயணபுரம் ஏரிக்கரையில் சேதமடைந்த பகுதிகள், அந்த ஏரியின் ஷட்டர் பகுதி மற்றும் கீழ்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாயின் உடைப்பு பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்தோம். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டோம். அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இங்கே தெரிவிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மூலம் செய்த தூர்வாரும் பணிகள் குறித்தும், பிற பணிகள் குறித்தும், எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், அக்டோபர், டிசம்பரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் கூடுதல் கவனத்துடன் அனைத்துதுறை அலுவலர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.