சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்திருந்தாலும், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவுகள் முடிந்துள்ளதால் அடுத்த கட்டமாக மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நோக்கி வருகின்றனர். ஆனால் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை கால நெருக்கடியை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை வாடிக்கையாக உள்ளது. தனியார் செயலிகளில் ஆம்னி பேருந்துகளுக்கு தற்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.1500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் நிலையில், அக்.29ம் தேதி பயணத்திற்கு குறைந்தபட்சம் 1500 முதல் அதிகபட்சமாக ரூ.3500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அக்.30ம் தேதி இதைவிட கூடுதலாக ரூ.5000 வரையும் சில பேருந்துகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிப்போம் என உறுதி அளித்துள்ளனர். ஆனால் தனியார் செயலிகள் தான் கூடுதலாக டிக்கெட் விற்கப்படுகிறது. எந்த செயலி, எந்த இணையதளம் என குறிப்பிட்டு புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் ஆம்னி பேருந்து கூடுதல் கட்டணம் குறித்த புகார்களை 1800 425 6151 கட்டணமில்லா எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு: தனியார் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.