சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 156 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 164 பேருடன் சென்னைக்கு நேற்று மதியம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் சென்னையில் பகல் 12.43 மணிக்கு, சென்னை பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியது. ஆனால் அந்த நேரத்தில் தரைக்காற்று அதிகமாக இருந்ததால், ஓடுபாதை தொடங்கும் இடத்திலேயே விமானம் தரையிறங்க முடியாமல் சிறிது தூரம் வந்து ஓடுபாதையில் தரை இறங்கியதால், விமானம் ஓடுபாதையில் ஓடி, வேகத்தை குறைத்து, திரும்புவது சிரமம் என்பதை விமானி உணர்ந்தார்.
இதையடுத்து விமானி, மிகுந்த சாமர்த்தியமாக துரிதமாக செயல்பட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவலும் கொடுத்துவிட்டு, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலிருந்து, உயரே எழும்பி வானில் வட்டமடித்து பறக்கத் தொடங்கினார். இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் விமானத்திற்கு என்னவானது, தரையிறங்கிய விமானம் மீண்டும் வானில் பறக்கத் தொடங்கி விட்டது என்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பயணிகளுக்கு, விமானம் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் வானில் சிறிது நேரம் பறந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் பகல் 12.58 மணிக்கு சென்னை விமான நிலைய முதலாவது பிரதான ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.
இதனால், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர். இந்த விமானம் பகல் 1.05 மணிக்கு, சென்னையில் தரை இறங்க வேண்டியது. திடீர் பிரச்னை காரணமாக, மீண்டும் வானில் பறந்து விட்டு, இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினாலும், குறிப்பிட்ட நேரத்தை விட 7 நிமிடங்கள் முன்னதாகவே வந்து தரை இறங்கி விட்டது. இது பயணிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்தில் திடீர் தரைக்காற்று காரணமாக, தரையிறங்கிய விமானம், ஓடுபாதையில் சரியான இடத்தில் இணைய முடியாமல், சிறிது தூரம் கடந்து வந்து இணைந்ததால் விமானத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கலை, விமானி மிகுந்த சாமர்த்தியமாக செயல்பட்டு, பத்திரமாக சென்னையில் தரையிறக்கியது குறிப்பிடத்தக்கது.
The post ஜெய்ப்பூரில் இருந்து வந்து தரையிறங்கிய பின் ஓடுபாதையில் இருந்து திடீரென மீண்டும் வானில் பறந்த விமானம்: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.