சென்னை: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மாநில சைபர் க்ரைம் பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில், பெடேக்ஸ் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர், எனது பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்து இருப்பதாகவும், எனவே எனது அழைப்பை மும்பை சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றுவதாக கூறி மிரட்டி, பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் ரூ.1.18 கோடியை என்னிடம் இருந்து பறித்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் மீது மாநில சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, தொழிலதிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம், குஜராத் மாநிலத்தில் இயங்கும் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. மேலும், மோசடி நபர்கள் மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்டது உறுதியானது.
குஜராத் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாய், பதபாய், போக்ரா ஆகியோர் மோசடிக்கு முக்கிய முகவர்களாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவை சேர்ந்த விவேக் பெலாடியா, தமாஜ்பாய் மற்றும் பரேஷ் நரஷிபாய், கல்சாயி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த மகாராஷ்டிரா மாநிலம் குர்துவாடியை சேர்ந்த சாஹில் (34) மற்றும் ஷாருக்கா (32) ஆகியோரை மாநில சைபர் க்ரைம் போலீசார் அம்மாநிலத்திற்கு சென்று கைது செய்தனர். இந்த மோசடிக்கு வங்கதேசம் டாக்காவில் உள்ள முக்கிய குற்றவாளி ஒருவர் திட்டம் தீட்டி செயல்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே வங்கதேசத்தில் உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்ய மாநில சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post தொழிலதிபரை மிரட்டி ரூ.1.18 கோடி பறிப்பு: 2 முக்கிய குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் கைது appeared first on Dinakaran.