×
Saravana Stores

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை பத்திரப்பதிவுத்துறை மாவட்ட முன்னாள் பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (77). கடந்த 1973ல் பத்திரப்பதிவு துறையில், சார்பதிவாளராக பணியில் சேர்ந்தார். இவர், 1991 முதல் மத்திய சென்னை பதிவுத்துறை அலுவலகத்தில் தணிக்கை பிரிவில் மாவட்ட பதிவாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், கடந்த 1991 ஜனவரி 1 முதல் 2000 டிசம்பர் 31 வரையிலான தனது பணி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 20 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு, அவரது பெயரிலும், மனைவி லதா (65) பெயரிலும் சொத்து சேர்த்ததாக கடந்த 2006ல் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரசேகரன், அவரது மனைவி, மகன் விஷ்ணு சக்ரவர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சந்திரசேகரன், அவரது மனைவி லதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். வழக்கு தொடர்ந்த நேரத்தில் 3வது எதிரி விஷ்ணு சிறுவனாக இருந்ததால் அவர் மீதான வழக்கு சிறார் வாரியத்திற்கு அனுப்பப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Special Court ,Deeds and Deeds Department ,Chandrasekaran ,Annanagar West, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது