×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் நள்ளிரவு பரபரப்பு 3ம் ஆண்டு மாணவனை ராகிங் செய்து பீர் பாட்டிலால் மண்டையை உடைப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் 3ம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் மது போதையில் அழைத்து ராகிங் செய்து பீர் பாட்டிலால் மண்டையை உடைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை பணி செய்யவிடாமல் மருத்துவமனை ஆர்எம்ஓ இது எங்கள் பிரச்னை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறியதால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மகன் ஹாலன்(21). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். வெளிமாவட்ட மாணவர் என்பதால் ஹாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார்.

வழக்கம் போல் நேற்று இரவு கேண்டீனில் உணவு சாப்பிட்டுவிட்டு ஹாலன் விடுதியில் உள்ள தனது அறைக்கு நடந்தி சென்றிருக்கிறார். அப்போது விடுதியில் மதுபோதையில் இருந்த 5ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் கிஷன்(24), தியானேஷ்(24) ஆகியோர், சீனியர்கள் நாங்கள் இருக்கும் போது ‘எங்களுக்கு சல்யூட் அடிக்காமல் எப்படி நீ எங்களை கடந்து போகலாம்’ என வழிமறித்து கேட்டுள்ளனர். அதற்கு ஹாலன் நான் கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார். உடனே கிஷன் மற்றும் தியானேஷ் இருவரும் ஹாலனை கிண்டல் செய்தப்படி உனது அறையில் தங்கியுள்ள ஜூனியர் மாணவர்களை இங்கு இப்பவே அழைத்து வரவேண்டும் என்று ராகிங் செய்துள்ளனர்.

உடனே ஹாலன் வேறு வழியின்றி அறையில் உள்ள சக மாணவர்களை அழைத்து வருவதாக கூறி சென்றுள்ளார். அதற்கு உடனே கிஷன் ‘டே நாங்கள் சொல்லியும் இப்படி தான் சாவகாசமாக நடந்து போவியா? வேகமாக நடந்து போக மாட்டீயா…. என கூறி ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு ஹாலன் ‘நீங்கள் இப்படி பேசினால் நான் மெதுவாகத்தான் போவேன்… என்று கூறியதும், சீனியர் மாணவர்களான கிஷன் மற்றும் தியானேஷ் ஆகியோர் போதையில் ஜூனியர் மாணவரான ஹாலனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனால் வலிதாங்க முடியாமல் ஹாலன் ஒரு கட்டத்தில் சீனியர் மாணவர்களை திருப்பி தாக்கியுள்ளார். அப்போது எங்களையே அடிப்பீயா என கூறி… கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஜூனியர் மாணவன் ஹாலன் தலையில் ஓங்கி அடித்து உடைத்தனர். இதில் ஹாலன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவர்கள் ஹாலனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வழக்கமாக மருத்துவமனையில் டாக்டர்கள் காயம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டு பதிவு செய்தனர்.

அந்த பதிவுகளின் படி கீழ்ப்பாக்கம் போலீசார் மருத்துவ மாணவர் விடுதிக்கு சென்று ஜூனியர் மாணவனை ராகிங் செய்து மண்டையை உடைத்த சீனியர் மாணவர்களிடம் விசாரணை நடத்த சென்றனர். உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்தததும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஆர்எம்ஓ, போலீசாரை வழிமறித்து ‘இது எங்கள் மாணவர்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ நீங்கள் தலையிட வேண்டாம் என்ற கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். அதற்கு போலீசார் மாணவன் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. மாணவனுக்கு ஏதேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஆர்எம்ஓ ‘சார் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லிட்டேன்’ திரும்பவும் பேசாதீங்க என்று கூறி போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் போலீசார் மருத்துவமனை தகவலின் படி விசாரணை நடத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தைக்கு ராகிங் செய்து தனது மகன் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மூலம் தெரியவந்தது. உடனே அவர் நெய்வேலியில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கிறார்.

அவர் வந்ததும் போலீசார் முறையாக புகார் பெற்று குடிபோதையில் மாணவனை ராகிங் செய்து மண்டையை உடைத்த சீனியர் மாணவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விஷயம் பெரிய அளவில் வெளியானதால் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை இன்று காலை ராகிங் தொடர்பாக விசாரணை நடத்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். ராகிங் செய்து சக மாணவனை பீர் பாட்டிலால் மண்டையை உடைத்த சம்பவம் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் நள்ளிரவு பரபரப்பு 3ம் ஆண்டு மாணவனை ராகிங் செய்து பீர் பாட்டிலால் மண்டையை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Subdukam Government Medical College ,Chennai ,Aubbakkam State Medical College Student Hostel ,RMO ,Submissive Government Medical College ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...