×

தாரமங்கலம் அருகே தரம் உயர்த்திய பள்ளியில் போதிய வசதி இல்லாததால் சிரமப்படும் மாணவர்கள்

*பாதை, சுற்றுச்சுவர் இல்லாமல் அவதி

தாரமங்கலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ளது சேடப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களான வானங்கரடு, பழக்காரனூர், மேட்டுமாறனூர், வாடன்வளவு, இந்திராகாலனி பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு சேடப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்தனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு போதுமான கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கல்வியாளர்களும், கிராமத்து மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன் எதிரொலியாக கடந்த 2017ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ₹1.61கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகையை கொண்டு அங்குள்ள கரடு பகுதியில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவும் கோலாகலமாக நடந்தது. ஆனால் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக பள்ளிக்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததால் கரட்டுப்பகுதியில் நடந்து செல்ல மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளியின் பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்து சேடப்பட்டி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:தாரமங்கலம்-நங்கவள்ளி நெடுஞ்சாலையில் சேடப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மெயின்ரோட்டில் இருந்து செல்வதற்கு மிகவும் குறுகலான பாதை வசதியே உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாதது, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாதையில் நடந்து பள்ளிக்கு வருவதற்கு மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆண்டு தோறும் மாணவர் சேர்க்ைகயும் வெகுவாக குறைந்து வருகிறது. 12ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 291 மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வருகின்றனர்.

இதேபோல் இங்குள்ள மாணவர்கள் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கான மைதானம் எதுவுமில்லை. விளையாட்டு மைதானம் இல்லாதால் அருகில் உள்ள காலிநிலங்களில் பயிற்சி பெற செல்கின்றனர்.

பல்வேறு சிரமங்களை தவிர்க்க சேடப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இந்த பகுதியில் பள்ளி மட்டுமன்றி ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் போன்றவையும் உள்ளது. அவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையே உள்ளது.

மேலும் பள்ளிக்கு மாணவர்கள் வரும் வழியான நங்கவள்ளி-தாரமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடையை அகற்றி விட்டனர். இதனால் பள்ளி நேரங்களில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயமும் நிலவி வருகிறது. எனவே இதுபோன்ற குறைகளை தவிர்த்து சிரமங்களை போக்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

11 அடி நிலத்திற்கு மட்டுமே சிக்கல்

சேடப்பட்டியை சேர்ந்த முத்து கூறுகையில், ‘‘நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அதற்கு பிறகு கடும் முயற்சிகளுக்கு பிறகே, பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கு நிதி கிடைத்துள்ளது. இதற்கு பிறகு பள்ளிக்கான சுற்றுச்சுவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இப்போது இவை அனைத்தையும் விட முக்கியமாக இருப்பது போதிய பாதை வசதி. பள்ளி சாலை வசதிக்காக 100அடி வரை இடம் தருவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் அதற்கு இடைப்பட்ட 11 அடி நிலம் கிடைப்பதில் தான் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலை தவிர்த்தால் பள்ளிக்குரிய பாதை வசதி கிடைக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.

விஷ ஜந்துக்களால் தொடரும் அச்சம்

கல்வி மேலாண்மைகுழு உறுப்பினர் கண்ணன் கூறுகையில், ‘‘இந்தபள்ளி தரைமட்டத்தில் இருந்து 80அடிக்கு மேல் உள்ள கரட்டுப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதனால் மாணவர்கள் கல்வி படிப்பதற்கான சுற்றுச்சூழல் போதிய அளவில் இல்லை. கரட்டுப்பகுதி என்பதால் அடிக்கடி விஷஜந்துக்களும் அழையா விருந்தாளியாக பள்ளி வகுப்பறைகளில் புகுந்து விடுகிறது. இது மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பள்ளிக்கான பாதை வழியாகவே ஆரம்பசுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் போன்றவற்றுக்கு வந்து செல்ல வேண்டும். இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பள்ளிக்கான பாதை வசதியை மேம்படுத்தி தரவேண்டும்,’’ என்றார்.

The post தாரமங்கலம் அருகே தரம் உயர்த்திய பள்ளியில் போதிய வசதி இல்லாததால் சிரமப்படும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Taramangalam ,Avathi Taramangalam ,Sedapatti ,Salem district ,Vanangaradu ,Palakkaranur ,Mettumaranur ,Wadanvalu ,Indirakalani ,Dinakaran ,
× RELATED ஓமலூர் பகுதியில் பரவலாக மழை