*சிசிடிவி கேமிராவும் திருட்டு
செஞ்சி : செஞ்சி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வடபுத்தூர் கிராமத்தில் அவியூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக காசிராஜன், மூர்த்தி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு, விற்பனை செய்த தொகை ரூ. 75 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இரவு பத்து மணி அளவில் பணியாளர்கள் சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்ற வடபுத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் செஞ்சி காவல்துறைக்கும், விற்பனையாளருக்கும் தகவல் தெரிவித்தார்.
செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது முன்பக்க கேட் மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பிராந்தி, பீர் பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு அதையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. விசாரணையில் மர்ம நபர்கள் வேனில் வந்து டாஸ்மாக்கில் கொள்ளையடித்துவிட்டு, மதுபாட்டில்களையும் வேனில் எடுத்துச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர கடை விற்பனையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன மது பாட்டில்கள் போக மேலும் கடையில் இருந்த சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
The post செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ₹1.50 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.