சென்னை: சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறநகர் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் மார்க்கத்தில் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயிலும் பயணிக்கின்றன. இந்நிலையில், மீஞ்சூர்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால், சென்னை நோக்கிச் செப்ட்ர தாதாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கிச் சென்ற 3 புறநகர் ரயில்கள் அனைத்தும் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி என சென்னை மார்க்கத்தில் சென்ற ரயில்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. இதனால், சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பயணம் செய்தவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள், மீஞ்சூர்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை நேரில் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து, விரிசல் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதனால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், மீஞ்சூர்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டு சுமார் 1 மணி நேரம் கழித்து இயக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இரு வழி தடங்கள் மட்டுமே இருப்பதால் மாற்றுப் பாதையில் ரயில்களை இயக்க முடியாமல் ரயில்வே ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், பயணிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, ரயில்வே துறை கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்திற்கு விரைந்து முழுமையான 4 வழி பாதையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
The post மீஞ்சூர்-அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.