- வேலச்சேரி
- தொடர் வண்டி நிலையம்
- வேலச்சேரி பறக்கும் ரயில் நிலையம்
- சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை
- வெள்ளாச்சேரி ரயில் நிலையம்
- தின மலர்
வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை, கடந்த 22ம் தேதி இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர், வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும், என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பேரில், வேளச்சேரி காவல் நிலைய மற்றும் ரயில்வே போலீசார், மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து வேளச்சேரி ரயில்நிலைய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில், ரயில் நிலையத்தில் எவ்வித வெடிகுண்டுகளும் சிக்கவில்லை. இதனால், இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், அரியலூர் மாவட்டம், திருமழாபாடியை சேர்ந்த ஜோதிவேல் (62) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய பெண், தனது தந்தை மதுபோதையில் உளறியதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருமழாபாடிக்கு நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அங்கு வீட்டில் இருந்த ஜோதிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை வேளச்சேரிக்கு கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜோதிவேல் 18 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். மேலும், உறவினர்கள் யாரும் இவரை கண்டு கொள்ளவில்லை. சுய தொழில் தொடங்க உதவி கேட்டு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால், எந்த வேலையும் கிடைக்காத விரக்தியில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பியது தெரியவந்தது. மேலும் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.