சென்னை: சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில், பொது இடங்களில் விதிமீறி குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் பிரதான பிரச்னைகளில் முக்கியமானதாக கருதப்படுவது குப்பை மேலாண்மை. இந்தியா முழுவதும் பரவலாக இந்த பிரச்னை காணப்படுகிறது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை விதிமீறி கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாகப் பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். தொடர்ந்து, பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையை மேம்படுத்தவும் அபராத தொகை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே அபராதம் விதிக்கும் செயல்பாடு அமலில் இருந்து வந்தது.
ஆனால், அந்த திட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் கண்ணை மூடிக்கொண்டு குப்பையை கண்ட இடத்தில் வீசி சென்றனர். இதையெல்லாம் பொறு த்து பொறுத்து பார்த்த சென்னை மாநகராட்சி, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில், பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி வீசப்படும் குப்பை மற்றும் வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் ரூ.500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதை தொடர்ந்து பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக ஆன் ஸ்பாட் அபராதம் சென்னை மாநகராட்சி விதித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டப்படுவதை தடுக்கும் வகையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விதிமீறி குப்பையை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியதாவது:
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மண்டலம் தோறும் தீவிர தூய்மைப்பணி, சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடுவது, நீர்வழித்தடங்களை தூர்வாரி சீரமைப்பது, சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுப்பது, கொசு ஒழிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிமீறி குப்பை கொட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிக்க, 15 பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டப்படுவதை தடுக்க, ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விதிமீறி குப்பையை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநகரம் முழுவதும் உள்ள கால்வாய் அடைப்புகள் மற்றும் வெள்ளத்திற்கு முக்கிய பங்காற்றும், சட்டவிரோத குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் கேமராக்கள் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடியாக தகவல்களை அனுப்பும். அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* இதுவரை ரூ.17.96 லட்சம் அபராதம்
சென்னையில் பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டியதாக இதுவரை ரூ.17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் மற்றும் விதிகளை மீறி செயல்படுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
The post பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமரா: மாநகராட்சி அதிரடி திட்டம் appeared first on Dinakaran.