- செபி
- ஹிந்தன்பர்க்
- பாஜக
- வேணுகோபால்
- புது தில்லி
- மதாபி பூரி
- பாராளுமன்றத்தின் பொது கணக்குக் குழு
- புச் ஹிண்டன்பர்க்
- பிஏசி
- கே.சி வேணுகோபால்
- சபாநாயகர்
- தின மலர்
புதுடெல்லி: செபி தலைவர் மாதபி புரி புச் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன் நேற்று ஆஜராகாமல் தவிர்த்து விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பிஏசி தலைவர் கே.சி.வேணுகோபாலுக்கு எதிராக சபாநாயகரிடம் பாஜ கூட்டணி புகார் அளித்துள்ளது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதபி புரி புச் மற்றும் அவரது கணவரும் இணைந்து, அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் ஏராளமான பங்குகளை வைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.
இதற்காகவே அதானிக்கு எதிரான விசாரணையை செபி தீவிரமாக நடத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை மாதபி மறுத்தார். இது தொடர்பாக மாதபி புச்சுக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு(பிஏசி) சம்மன் அனுப்பியது. அதன்படி, நாடாளுமன்ற குழு முன்பாக மாதபி புச் மற்றும் உறுப்பினர்கள் நேற்று ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், பொது கணக்கு குழு கூட்டம் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் எம்.பி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் மாதபியும், செபி உறுப்பினர்களும் ஆஜராகாமல் தவிர்த்து விட்டனர். கூட்டம் தொடங்கியதும், ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. தங்களுடைய கருத்துகளை கூட்டத்தில் வெளியிட அனுமதி மறுக்கிறார் கே.சி.வேணுகோபால். மாதபி புரி புச் மற்றும் செபி உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பியது வேணுகோபாலின் தன்னிச்சையான முடிவு என்று பாஜ எம்பிக்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கடுமையான விவாதம் ஏற்பட்ட நிலையில் வேணுகோபால் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
வேணுகோபால் கூறுகையில்,‘‘காலை 9.30 மணிக்கு செபி தலைவரும், உறுப்பினர்களும் தங்களுடைய தனிப்பட்ட வேலை காரணமாக பொது கணக்கு குழு முன் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தனர். இதனால், கூட்டத்தை இன்னொரு நாளுக்கு ஒத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளோம்’’ என்றார். எதிர்க்கட்சி எம்பி ஒருவர் கூறுகையில்,‘‘ பொது கணக்கு குழு கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் தான் மாதபி புரி புச் தகவல் தெரிவித்தார். இது நாடாளுமன்ற குழுவை அவமதிக்கும் செயல்’’ என்றார். பிஏசி உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத்(பாஜ) கூறுகையில்,‘‘பிஏசி தலைவர் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறார்.
ஒன்றிய கணக்கு தணிக்கை துறையின்(சிஏஜி) அறிக்கையை விவாதிப்பதே பொது கணக்கு குழுவின் வேலை.செபி பற்றி கணக்கு தணிக்கை துறை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தாமாக முன்வந்து தன்னிச்சையான சில விஷயங்களை அவர் செய்கிறார். ஒட்டுமொத்த நடவடிக்கையும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது’’ என்றார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தேஜ கூட்டணி எம்பிக்கள் சந்தித்து வேணுகோபாலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
The post ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற குழு முன்பு செபி தலைவர் ஆஜராகாமல் தவிர்ப்பு: வேணுகோபால் எம்.பி.க்கு எதிராக சபாநாயகரிடம் பாஜ புகார் appeared first on Dinakaran.