சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் கடும் புயலாக மாறி, நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலையில் கரையைக் கடக்கிறது. கடந்த 23ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த டானா புயல், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் 23ம் தேதி இரவே தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மேலும், அந்த தீவிரப் புயல் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒடிசாவின் பாரதீபுக்கு தென்கிழக்கே 210 கிமீ தொலைவிலும், ஒடிசாவின் தாமராவுக்கு தெற்கு- தென்கிழக்கே 240 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தெற்கே 310 கிமீ தொலைவிலும் நிலை கொண்டது.
பின்னர் அந்த தீவிரப் புயல் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே நேற்று இரவு கடும்புயலாக மாறியது.
அத்துடன், நேற்று நள்ளிரவில் (24ம் தேதி) தொடங்கி இன்று அதிகாலை வரையிலான நேரத்தில் கரையைக் கடக்கிறது. அப்போது மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். இதற்கிடையே, தமிழகத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் இன்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும். இதேநிலை 30ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.
The post டானா புயல் இன்று கரையை கடக்கிறது appeared first on Dinakaran.