×
Saravana Stores

புளியங்குடியில் பரிதாபம்; விஷ செடி தின்ற 5 மாடுகள் உயிரிழந்தது: குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறல்


புளியங்குடி: புளியங்குடியில் விஷ செடிகளை தின்ற 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அந்த மாடுகளை வளர்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புளியங்குடி கிருஷ்ணப்பர் நாயகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்து(52). இவரது குடும்பத்தினர் பரம்பரையாக கால்நடைகள் பராமரித்து வருகின்றனர். இவரது வீட்டில் தற்போது 7 பசுமாடுகள் மற்றும் ஒரு காளை என 8 மாடுகள் உள்ளன. இவற்றில் சிந்து ஜெஸி இனமான பசுமாடு, காலை மாலை என ஒரு நாளைக்கு சுமார் 12 லிட்டர் பால் கறக்கும். இதுபோல் காளை, கிர் ரகம் ஆகும். இது பார்ப்பதற்கு ஒட்டகம்போல் உயரமாக இருக்கும்.இந்நிலையில் நேற்று முத்துவின் உறவினர், மாடுகளை புளியங்குடியில் உள்ள சமுத்திரம் குளத்துக்கரையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது மழைக்காலத்தில் முளைத்திருந்த செம்மண் நெருஞ்சி விஷ செடிகளை மாடுகள் தின்றுள்ளது.

இதையடுத்து இரண்டு மாடுகள், வயிறு உப்பிய நிலையில் சம்பவ இடத்தில் செத்து மடிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவின் உறவினர், மற்ற மாடுகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனைத்தொடர்ந்து மேலும் 3 பசுமாடுகள், வயிறு வீங்கிய நிலையில் அடுத்தடுத்து செத்து மடிந்தன. ஒரே நேரத்தில் 5 மாடுகள் உயிரிழந்ததால் முத்து குடும்பத்தினர், சோகம் தாங்கமுடியாமல் கதறி அழுதனர். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் முத்துவின் வீட்டிற்கு சென்று இறந்த மாடுகளை பார்த்து சோகத்துடன் திரும்பிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து இறந்த 5 மாடுகளும், அங்குள்ள பகுதியில் நேற்றிரவு உடல் அடக்கம் செய்யப்பட்டன.

மழைக்காலத்தில் வளரும் விஷ செடியான செம்மண் நெருஞ்சி விஷ செடிகளை தின்றதால் 5 மாடுகளும் உயிரிழந்துவிட்டன. இதனால் புளியங்குடி பகுதியில் காணப்படும் விஷ செடிகளை அப்புறப்படுத்தி கால்நடைகள் உயரிழப்பு ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post புளியங்குடியில் பரிதாபம்; விஷ செடி தின்ற 5 மாடுகள் உயிரிழந்தது: குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறல் appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,Buliangudi ,Muthu ,Krishnapar Nayakar South Street, Puliangudi, Tenkasi district ,
× RELATED புளியங்குடியில் உடல்நலக்குறைவால்...