×
Saravana Stores

வாக்… கரோ with வாக்கரூ

நன்றி குங்குமம் தோழி

இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வரும் முன் நாம் அனைவரும் ஒரு இடத்திற்கு நடந்துதான் செல்வோம். வாகனங்களின் அறிமுகத்திற்குப் பிறகு நாம் நடப்பதே அரிதாகிவிட்டது. அதே சமயம் நடக்கும் போது பாதங்கள் பாதிக்காமல் இருக்க அழகான செருப்புகள் மற்றும் ஷூக்கள் முக்கியம். ஆரோக்கியத்தின் முதல் கட்ட நடைப்பயிற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சவுகரியமாக நடப்பதற்காகவே தன் காலணி நிறுவனமான வாக்கரூவை 2012ல் துவங்கி இருக்கிறார் நௌசத். இவர் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் பாதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காலணிகளை தயாரித்து வருகிறார்.

‘‘என்னோட சொந்த ஊர் கேரளா என்றாலும், நாங்க கோவையில் செட்டிலாகிட்டோம். என் அப்பா ஹவாய் செருப்பினை தயாரித்து வந்தார். அவரின் தொழிலுக்கு நான் உதவ வேண்டும் என்பதற்காகவே பொறியியலில் கெமிக்கல் துறையை தேர்வு செய்து படிச்சேன். அதில் முதுகலைப்பட்டம் எல்லாம் பெற்று நான் அப்பாவுடன் தொழிலில் இணைந்த போது ஹவாய் செருப்புகளின் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைந்த நிலையில் இருந்தது. பலர் அந்த செருப்பினை பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டார்கள். அவர்களின் தேவை என்ன என்று ஒரு சர்வே எடுத்தோம். அதன் மூலம் வெள்ளை, நீல நிற ஹவாயினை கொஞ்சம் மார்டனாக கொடுத்தால் மக்கள் வாங்க தயாராக இருப்பதை தெரிந்து கொண்டோம்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை உருவாக்க திட்டமிட்டோம். ஹவாயில் இருந்து மாற்றாக வர்ஜின் குவாலிட்டி பிவிசி, ஏர் இஞ்ஜெக்ட் பிவிசி காலணிகளை அறிமுகம் செய்தோம். இவை புதுசு என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு PU மற்றும் EVA செருப்புகளுக்கு மாறினோம். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், அரியானா, ராஜஸ்தான் என அனைத்து இடங்களிலும் எங்களின் காலணி தயாரிப்புக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. ஃபேஷன் ஹவாய் செருப்புகளுக்காக ராஜஸ்தானில் தனிப்பட்ட தொழிற்சாலை துவங்கி இருக்கிறோம். மேலும் கோவை, சென்னை மற்றும் மதுரையில் எங்களின் கிடங்குகள் உள்ளன. அங்கிருந்துதான் அனைத்து ரீடெயில் கடைகளுக்கு காலணிகள் விநியோகிக்கப்படுகிறது.

பொதுவாக காலணிகளில் சிலிப்பர் மற்றும் சாண்டில் வகைதான் பிரபலம். அதனால் அதனை PU மற்றும் EVA கொண்டு தயாரிக்க துவங்கினோம். PU (Polyurethane), EVA (Ethylene vinylacetate) பெரும்பாலும் காலணிகளில் பயன்படுத்தக்கூடிய பொருள். PU காலணிகள் நடக்கும் போது வழுக்காது, அதிக நேரம் அணிந்திருந்தாலும் குதிக்கால் வலி ஏற்படுத்தாது, எல்லா காலத்திலும் அணியக்கூடியது, மிருதுவானது. EVA லேசானது, இதில் உள்ள பாலிமர் குஷன் எஃபெக்ட் கொடுக்கும்’’ என்றவர், தமிழகம் முழுக்க தன்னுடைய காலணிகளை விநியோகம் செய்து
வருகிறார்.

‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுக்கு விநியோகர்கள் உள்ளனர். அவர்கள் அனைத்து மல்டி பிராண்ட் கடைகளிலும் எங்களின் காலணிகளை விநியோகம் செய்வதால், அனைத்து ரீடெயில்
கடைகளிலும் எங்களின் காலணிகள் விற்பனைக்காக கிடைக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் நாங்க காலணிகளை அறிமுகம் செய்கிறோம். தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்கள் ஒரு ரகம். இவர்களுக்கானது வாக்கரூ பேசிக்ஸ். இவை சாதாரண டிசைனில் இருக்கக்கூடிய செருப்புகள். அடுத்து வாக்கரூ பிளஸ். ஃபேஷன் மற்றும் புதுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்ட பிரீமியம் டைப் காலணிகள்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 முதல் 50 மாடல்களை நாங்க கொண்டு வருகிறோம். மார்க்கெட்டின் நிலவரம் மற்றும் லேட்டெஸ்ட் டிரெண்ட் குறித்து ஆய்வு செய்ய தனிப்பட்ட குழு உள்ளது. அவர்கள் அதனை சேகரித்து தருவார்கள். அதற்கு ஏற்ப நாங்க காலணிகளில் புதுவித டிசைன்கள் மற்றும் அம்சங்களை அறிமுகம் செய்கிறோம். அன்றாடம் பயன்படுத்தும் காலணிகள் முதல் சாதாரண வாக்கிங் ஷூக்கள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் என அனைத்து வகையும் தயாரிக்கிறோம். தமிழகம் மட்டுமில்லாமல் மியான்மர், ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் எக்ஸ்போர்ட் செய்கிறோம்’’ என்றவரை தொடர்ந்தார் பிசினஸ் ஹெட்டான ஷமீர். இவர் காலணிகளின் சிறப்பம்சங்களை விவரித்தார்.

‘‘எங்க பிராண்டுக்கு தனிப்பட்ட ஷோரூம்கள் நிறைய கிடையாது. விநியோகர்கள் மூலமாகத்தான் நாங்க ரீடெயில் கடைகளுக்கு சப்ளை செய்கிறோம். கோவையில் தொழிற்சாலை இருப்பதால், இங்கு பிரத்யேக ஷோரூம் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் அனைத்துவிதமான காலணிகள், சாண்டல்கள், பெல்லி ஷூக்கள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள், பார்மல் ஷூக்கள், கிராக்ஸ் மாடல் காலணிகள் என அனைத்து சைஸ்களிலும் உள்ளது.

நேரடியாகவும் வாங்கலாம் அல்லது ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். எங்களின் மிகவும் பிரத்யேகமானது ஸ்போர்ட்ஸ் ஷூக்கள். மூன்று விதமான லேயர்கள் கொண்டு இதனை வடிவமைத்திருக்கிறோம். ஷூவின் அடிப்பாகம் வழுக்காமல் இருக்க அமைத்திருக்கிறோம். அடுத்து ஒரு குஷன் போன்ற அமைப்பு கொடுத்திருக்கிறோம். இதன் மூலம் ஓடும் போது, குதிக்கும் போது பாதங்களை பாதிக்காமல் பாதுகாக்கும். அதே போல் ஷூவின் உள்பகுதியிலும் ஸ்பாஞ்சினை இணைத்திருக்கிறோம். கால்களுக்கு மிருதுவாக இருக்கும். இதில் Non marking ஷூக்களும் உண்டு. டென்னிஸ் மற்றும் பேட்மின்டன் கோர்ட்டில் விளையாட இந்த ஷூக்களைதான் பயன்படுத்த வேண்டும்.

டபுள் டென்சிட்டி அடிப்பாகம் கொண்டு காலணிகளும் உள்ளது. இது கால் பாதங்களுக்கு மிருதுவாக இருக்கும். EVA செருப்புகள் ஒரே மோல்டில் தயாரிக்கப்படுவதால், பெரும்பாலும் கிராக்ஸ் டைப் மாடல்களைதான் பயன்படுத்துகிறோம். இன்றைய லேட்டெஸ்ட் டிரெண்ட் பக்கில் டைப் காலணிகள். அதனை ஆண்-பெண் இருவருக்குமான காலணிகளில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு சிலருக்கு கால் பாதம் வளைந்து இருக்கும். அவர்களின் கால் பாத வளைவிற்கு ஏற்ப பிரத்யேகமாக டபுள் டென்சிட்டி மற்றும் அடிப்பாகம் கிரிப்பாக இருக்கும் காலணிகளும் உண்டு.

ஒவ்வொரு வகை காலணிகளை வடிவமைக்க தனிப்பட்ட டிசைனிங் குழு செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் டிரெண்டிங்காக உள்ள டிசைன்கள் குறித்து ஆய்வு செய்யவும், டிசைன் செய்யப்பட்ட செருப்புகளின் தயாரிப்பு மேம்பாட்டிற்காகவும், விற்பனைக்காகவும் தனித்தனி குழு இயங்குகிறது. கடைகளில் எந்த மாடல் காலணிகள் மக்கள் மத்தியில் அதிக விற்பனையில் உள்ளது என்பதையும் கணக்கெடுப்போம். இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டுதான் ஒரு டிசைனை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறோம்’’ என்றார் ஷமீர்.

40 ஜோடி காலணிகள் 4 நிமிஷத்தில்!

‘‘இந்தக் காலணிகள் அனைத்தையும் மோல்டிங் முறையில்தான் தயாரிக்கிறோம். காலணிகளின் ஒவ்வொரு பாகமும் தனியாக தயாரிக்கப்பட்டு பிறகு அதனை ஒன்றாக இணைத்து மோல்டிங் செய்வோம். அதற்கான இயந்திரங்களை இத்தாலியில் இருந்து வரவழைத்திருக்கிறோம். 40 ஜோடி காலணிகள் தயாரிக்க 4 நிமிஷம் போதும். முதலில் காலணியின் அடிப்பாகத்தினை ஒவ்வொரு அளவிற்கு ஏற்ப கத்தரித்துக் கொள்வோம். அதற்கென தனிப்பட்ட இயந்திரம் உள்ளது. அதில் தேவையான அளவினை குறிப்பிட்டால் போதும், ஒரு நொடியில் 200 காலணிக்கான அடிப்பாகத்தினை கத்தரித்துவிடும். அடுத்து காலணிகளின் வார் பகுதி. இதனையும் காலணிகளின் அளவிற்கு ஏற்ப கத்தரித்து பண்டில் செய்வோம்.

அடுத்தகட்டம் ஏற்கனவே கத்தரித்து வைக்கப்பட்டிருக்கும் அடிப்பாகத்தில் காலணியின் வார் பகுதியினை இணைத்து தைப்பது. இதனை நாங்க இங்கு செய்வதில்லை. வெளியே கொடுத்து தைத்து வாங்குகிறோம். அதன் பிறகு கடைசி கட்டமாக மோல்டிங். அதாவது, PUவினை வாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் காலணி அடிப்பாகத்துடன் சேர்ப்பது. இதற்கு தனிப்பட்ட இயந்திரம் உள்ளது. இரண்டு பகுதியாக இருக்கும் இந்த இயந்திரத்தில் மேல் பகுதியில் வாருடன் இணைக்கப்பட்ட அடிப்பாகத்தினை பொருத்துவோம். இயந்திரத்தின் அடிப்பாகத்தில்
PU மோல்டிங்கினை நிரப்பி இரண்டையும் மோல்டிங் செய்வோம்.

ஒரு காலணி PUவுடன் மோல்டாக மூன்று நிமிடம் எடுக்கும். நான்காவது நிமிடத்தில் முழுமைப் பெற்ற காலணி நம் கையில் இருக்கும். அதன் பிறகு எக்ஸ்ட்ராவாக இருக்கும் மோல்டினை நீக்கி குறைபாடு உள்ளதா என்று சரி பார்த்து பிறகு பேக்கிங் செய்யப்படும். இதே முறையில்தான் ஷூக்களும் தயாரிக்கப்படுகிறது. டிசைனிற்கு ஏற்ப ஷூவின் மேல் பாகம், காலணியின் அடிப்பாகம் மற்றும் வார் பகுதி மாறுபடும். PU மோல்டிங் நிரப்பும் போதே காலணியின் நிறம் மற்றும் அடிப்பாகத்தின் தடிமன் இயந்திரத்தில் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.’’

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: சதீஷ்

The post வாக்… கரோ with வாக்கரூ appeared first on Dinakaran.

Tags : Garo ,Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!