×
Saravana Stores

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: செங்கோட்டையில் 68 மிமீ மழைப்பொழிவு

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாலும், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த 14ம் தேதி தொடங்கிய நிலையில், வடமாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக காலையில் வெயிலும், மாலைப்பொழுதில் மழையும் பெய்து வருகிறது.

கடந்த இரு தினங்களாக நெல்லை மாநகரில் மாலை பொழுதில் மேகங்கள் திரண்டு ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அணை, கன்னடியன் அணைக்கட்டு பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான தூறல் தென்பட்டது. நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்ட மழை அளவு விபரம்: நெல்லை 12.20 மிமீ, பாளையங்கோட்டை 8, சேர்வலாறு 5, பாபநாசம்2, மணிமுத்தாறு 21.20, கன்னடியன் 18.40, சேரன்மகாதேவி 8, களக்காடு 2, மூலைக்கரைப்பட்டி 7 மிமீ, அம்பாசமுத்திரம் 7, ராதாபுரம் 13, நாங்குநேரி 20 மிமீ மழை பெய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், பனையூர், கருவந்தா, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. தென்காசியில் 15 மிமீ மழையும், செங்கோட்டையில் அதிகபட்சமாக 68 மிமீ மழையும், ஆய்குடி 10, கடனாநதி 4, குண்டாறு 22, ராமநதி 30, கருப்பாநதி 9, சங்கரன்கோவில் 19.50, சிவகிரி 46 மிமீ மழையும் பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மழையே பதிவாகவில்லை. மாலையில் கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டியது. நெல்லை, தென்காசி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்காலத்தில் தென் மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் இயல்பைவிட குறைவாகவும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். அதற்கேற்ப இதுவரை வடமாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் இதுவரை எதிர்பார்த்த மழை பதிவாகவில்லை.

The post நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: செங்கோட்டையில் 68 மிமீ மழைப்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Nellai, Tenkasi ,Tuticorin ,Sengottai ,Nellai ,Tenkasi ,Thoothukudi ,Tamil Nadu ,Southeast Bay of Bengal ,North East… ,Nellai, ,Tenkasi, ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை