- பெருமாள் கோயில்
- பாரிசை
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- அரசாங்க அருங்காட்சியகம்
- மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணக் குழு
- பேரிகை
- கனிமங்கலம்
- கிருஷ்ணகிரி அருங்காட்சியகம்
- காப்பாளர்
- சிவகுமாரின்
- திருமலைக்கோயில்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பேரிகையை ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
கணிமங்கலம் என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வின் போது, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், திருமலைக்கோயில் மைதானத்தில் மாடு கட்டிவைக்கப்பட்ட இக்கல்வெட்டினை கண்டு பிடித்தார். பின்னர் கல்வெட்டை கிராமத்தினரின் உதவியால் சுத்தம் செய்யப்பட்டது.
இதனை அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்துக் கூறியதாவது:
பூர்வாதராயர்கள் என்னும் குறுநில தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர் ஆவார்கள். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில், சிறு தலைவர்களாய் இருந்து ஒய்சாளர்களின் காலத்தில் ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகா மண்டலீஸ்வரர்களாக இருந்தனர். சின்னக்கொத்தூர், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோயில்களை கட்டியும், அவற்றிற்கு பல்வேறு தானங்களையும் வழங்கியுள்ளனர். இந்த பூர்வாதராயர்களில் ஒரு முக்கிய தலைவர்தான், பூமிநாயக்கன் என்பவன். இவரது கல்வெட்டைத்தான் கணிமங்கலத்தில் கண்டறிந்துள்ளோம். இவர் இப்பகுதியின் மகா மண்டலீஸ்வரராக இருந்தபோது கணிமங்கலம் என்ற ஊருக்கு பூமிநாயக்க சதுர்வேதி மங்கலம் என்று தனது பெயரை வைத்து, அதனை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இன்றும் இக்கிராமத்திற்கு 750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கணிமங்கலம் என்ற பெயரே எவ்வித மாற்றமுமின்றி வழங்கப்பட்டு வருவது சிறப்பாகும். இவ்வூரை சேர்ந்த தலைவர்கள் சிலர் அப்போதைய அத்திசமுத்திரத்தில் (தற்போது அச்சேந்திரம் என்று வழங்கப்படுகிறது) உள்ள பெருமாள் கோயிலுக்கு நிலம் தானம் வழங்கியுள்ளதை, அக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இன்றும் இவ்வூரில் கோட்டை என்ற பகுதி இருப்பதை அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நாங்கள் இப்பகுதியில் மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மூலம், இம்மாவட்ட வரலாற்றினை முழுவதுமாய் அறிந்து கொள்வதற்கான தடயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார், அச்சேந்திரம் பெருமாள் கோயில் பூசாரி ராஜப்பா, கணிமங்கலத்து ஊர்கவுண்டர் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பெருமாள் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கிய கல்வெட்டு: பேரிகை அருகே கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.