×

இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.. இனி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி சேவை வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்..!!

சென்னை: ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவையை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடை மூலமாக பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு துவக்கி வங்கி சேவைகளை வழங்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்களில் அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய வங்கி திட்டங்களை வகுத்து, இளைஞர்களை கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கி சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.. இனி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி சேவை வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Department of the Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை...