வேளச்சேரி: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டறையை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர், வேளச்சேரி ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து தகவலின் பேரில் வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார், வேளச்சேரி காவல்நிலைய போலீசார், ரயில்வே போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசார் மோப்ப நாய் லிசியுடன் ரயில் நிலையத்திற்கு சென்று 2 மணிநேரத்திற்கு மேலாக சோதனையிட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அரியலூர் மாவட்டத்திலிருந்து பேசுவதாக கூறி மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று கண்டறிய அவர் பேசிய மொபைல் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த எண் அரியலூர் மாவட்டம், திருமேல்பட்டியை சேர்ந்த ஜோதிவேல் (50) என தெரியவந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய பெண் எனது அப்பாதான் குடிபோதையில் உளறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரியில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
The post வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் நள்ளிரவில் பரபரப்பு appeared first on Dinakaran.