* 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 18,000 போலீசார் பாதுகாப்பு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
சென்னை: பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளியை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கேமராவில் குற்றவாளிகளின் முகம் தெரிந்தவுடன் கேமராவே காட்டிக் கொடுக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார். பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளியை கொண்டாடும் வகையில் தி.நகர் உள்ளிட்ட கூட்டம் மிகுந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தி.நகர் ரங்கநாதன் தெரு வழியாக நடந்து சென்று ஆய்வு செய்தார். ஆய்வு பணியை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: தி.நகரில் மொத்தம் என்ஆர்எஸ் செயலியில் பொருத்தப்பட்ட 64 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்துள்ளோம்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது, காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்கு ‘டேக் சிஸ்டம்’ அறிமுகம் செய்துள்ளோம்.டிரோன்கள் வாயிலாக சந்தேக நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்ஆர்எஸ் செயலி பொருத்தப்பட்ட 64 சிசிடிவி கேமராக்களுடன் இணைத்துள்ளோம். அதில் எங்களிடம் உள்ள பழைய குற்றவாளிகளின் புகைப்படங்கள் அதில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதனால் கூட்டத்தில் பழைய குற்றவாளிகள் நுழைந்தால் அவர்களின் முகத்தை அந்த சிஸ்டம் உடனே அவர்களை அடையாளம் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும்.
அதன்படி சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்படுவார்கள். மெட்ரோ பணிகள் நடக்கிறது. இதனால் அனைத்து வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைத்துதான் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே வளர்ச்சி பணிகள் நடக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாடும் வகையில் 18 ஆயிரம் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
* பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள்
தி.நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வாகனங்கள் விடும் வகையில் தி.நகரில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மற்றும் தண்டபாணி சாலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். ஏற்கனவே மல்டிலெவல் கார் பார்க்கிங் உள்ளது. அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்பாடமல் இருக்க பர்க்கிட் சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு குற்றவாளிகளின் முகம் கேமராவில் தெரிந்தால் காட்டிக்கொடுக்கும் புதிய முறை அறிமுகம் appeared first on Dinakaran.