பெரம்பூர்: சவாரிக்கு அழைத்து சென்று, ரேபிடோ கார் டிரைவரை சரமாரியாக தாக்கி பணம் பறித்த ஆசாமிகள், காலில் விழுந்து அவர் கெஞ்சியதால் செல்போனை மட்டும் கொடுத்துவிட்டு தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம், மேலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக ரேபிடோ செயலி மூலம் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில், ஒரு எண்ணில் இருந்து பேசிய பெண் ஒருவர், மணலியிலிருந்து செங்குன்றம் வரை போக வேண்டும் என கார் புக் செய்துள்ளார். வினோத்குமார் அந்த சவாரிக்காக மணலி சின்ன சேக்காடு பகுதிக்கு சென்று, 2 ஆண் நபர்களை ஏற்றிக்கொண்டு மாதவரம் ரவுண்டானா வரை சென்றார். அப்போது காரில் இருந்தவர்கள் நண்பர் ஒருவர் வருவதாக கூறி அவரை மீண்டும் எம்கேபி நகர் பகுதிக்கு காரில் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது எருக்கஞ்செரி நெடுஞ்சாலை சாஸ்திரி நகர் பகுதி அருகே வந்தபோது வினோத்குமார் காரை நிறுத்திவிட்டு இதற்கு மேல் வண்டி செல்லாது, நீங்கள் கூறிய இடம் வந்துவிட்டது என கூறியுள்ளார். அப்போது, காரில் இருந்த இருவரும் கீழே இறங்கி வினோத் குமாரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த 2700 ரூபாய் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டனர். வினோத்குமார் அவரது காலில் விழுந்து அழுது செல்போன் இல்லை என்றால் என்னால் வேலை செய்ய முடியாது என கெஞ்சியுள்ளார். உடனே அவர்கள் செல்போனை மட்டும் கொடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். அதன் பிறகு வினோத்குமார் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 பேரை தேடி வருகின்றனர்.
The post நள்ளிரவில் சவாரிக்கு சென்றபோது ரேபிடோ கார் டிரைவரை தாக்கி பணம் பறிப்பு appeared first on Dinakaran.