சென்னை: வீட்டு செலவுக்கு போதுமான வருமானம் இல்லாததால் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து ெசன்ற மனைவியை கொலை செய்த கணவருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எலக்ட்ரிக்கல் சூபர்வைசர் அருள்குமார் (29) என்பவரும், சந்தியா (19) என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இருவரும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் தனிக்குடித்தனமாக வசித்து வந்தனர். இந்த நிலையில், அருள்குமாரின் வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனவும், உன்னோடு வாழ பிடிக்கவில்லை எனவும் சந்தியா அருள்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சந்தியா தனது பெற்றோர் வசிக்கும் நெசப்பாக்கத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த 2019 மார்ச் 30ம் தேதி சந்தியாவின் தாய் வீட்டுக்கு சென்ற அருள்குமார், அங்கிருந்த சந்தியாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து சந்தியாவின் தாயார் சரிதா அளித்த புகாரின் அடிப்படையில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மதி முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு போதிய ஆதாரங்கள், சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அருள்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post போதிய வருவாய் இல்லாததால் தகராறு காதல் மனைவியை குத்திக்கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.