×
Saravana Stores

ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை மோசடி: பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மோசடி கும்பல் தற்போது தள்ளுபடி விலையில் ரூ.3க்கு குருவி வெடி என்றும், ரூ.10க்கு ஸ்கை ஷாட் என பல்வேறு வகை பட்டாசுகள் விற்பனை செய்வதாக இன்ஸ்ட்ாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் மோசடி செய்து வருகின்றனர். இதுபோன்ற போலியான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்போது மாநில சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்து வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த 50 நாட்களில் தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் மூலம் தமிழகம் முழுவதிலும் இருந்து 17 புகார்கள் வந்துள்ளன.

எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகை கால ஷாப்பிங்கை குறிவைத்து தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக கவர்ச்சியான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை மோசடி நபர்கள் வடிவமைக்கின்றனர். மக்கள் வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது செல்போன் அழைப்பு மூலமாகவோ மோசடி நபர்கள் தொடர்பு கொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது www.kannancrackers.in மற்றும் www.sunrisecrackers.com போன்ற போலி இணையதளங்களில் பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர்.

இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல் தோன்றினாலும், இவை பணத்தை திருடுவதற்கான வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்பு பட்டியல்கள் விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களை காண்பிக்கும். பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால் பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான இணையதளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகின்றனர். மேலும், இந்த வலைத்தளங்களிலுள்ள தங்கள் தகவல்களை நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுகிறது.

The post ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை மோசடி: பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police ,Chennai ,Tamil ,Nadu ,Diwali festival ,Tamil Nadu ,
× RELATED காவல்துறை மாநாட்டு பரிந்துரைகளின்படி...