×
Saravana Stores

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ராயபுரம், திரு.வி.க நகரில் 2,069 புதிய குடியிருப்புகள்: பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் 2,069 அடுக்குமாடி வீடுகள் புதிதாக கட்டப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ததில், சென்னையில் 27,038 குடியிருப்புகளும், மாநிலத்தின் இதர நகரங்களில் 3,354 குடியிருப்புகளும் என மொத்தம் 30,392 குடியிருப்புகள், காலநிலை மாற்றம் நீண்ட நாள் பயன்பாட்டால் சிதிலமடைந்து உள்ளது கண்டறியப்பட்டது. இந்த குடியிருப்புகளை அகற்றி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ரூ.2,400 கோடி மதிப்பில் 15 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை பெருநகரில் மட்டும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன.

இதில் சிதிலமடைந்த, 20,000க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக மறு கட்டுமானம் மேற்கொள்ள வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிதிலமடைந்த கட்டிடங்களில் வசிப்போரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மறு கட்டுமானத்திற்கான நிதியை, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் வாயிலாகவும், பிற திட்டங்கள், சி.எம்.டி.ஏ., வாயிலாகவும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் மூன்று இடங்களில், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, 269 வீடுகள் அடங்கிய புதிய 9 மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.

இதற்கான நிதி பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இதே மண்டலத்தில், சி.எம்.டி.ஏ.,வின் வடசென்னை வளர்ச்சி திட்ட நிதியில், 1,500 வீடுகள் அடங்கிய, 11 மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. திரு.வி.க நகர் மண்டலத்தில், 300 வீடுகள் அடங்கிய 4 மாடி குடியிருப்பு, வட சென்னை வளர்ச்சி திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் இந்த குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் துவங்கும். இந்த குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருவிளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ராயபுரம், திரு.வி.க நகரில் 2,069 புதிய குடியிருப்புகள்: பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Rayapuram, T.V.K Nagar ,Urban Habitat Development Board ,CHENNAI ,Tamilnadu Urban Habitat Development Board ,Rayapuram ,Tiruvik Nagar ,Tamil Nadu Urban Habitat Development Board ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை...