ஊட்டி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கேக் மிக்சிங் திருவிழா நேற்று துவங்கியது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது. கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான கலவை கலப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வை ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ என கொண்டாடப்படுகிறது. வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த இந்த கொண்டாட்டம் இந்தியாவில் நட்சத்திர ஓட்டல்களிலும் ஊடுருவி விட்டது. அதன்படி, இந்த விழா ஊட்டியில் உள்ள ஸ்டெர்லிங் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கேக் தயாரிப்பில் ஈடுபட்ட தனியார் ஓட்டல் ஊழியர்கள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாத காலத்துக்கு முன்பு கேக் மிக்ஸிங் செரிமனி ஐரோப்பா, அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அதே போன்று நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கேக் மிக்சிங் திருவிழா துவக்கப்பட்டுள்ளது. தற்போது பல சுவைகளில் கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக உலர் திராட்சை, அத்தி, செர்ரி பழங்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றை மதுபானங்களுடன் கலந்து ஒரு மாத காலம் பதப்படுத்தப்பட்டு, பின்னர் மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்படும். இந்த கேக் வெட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும், என்றனர்.
The post கிறிஸ்துமஸ் முன்னிட்டு ஊட்டியில் ‘கேக் மிக்சிங் திருவிழா’ துவக்கம் appeared first on Dinakaran.