செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை கடத்திச் சென்று முட்புதரில் வைத்து கொன்று இறைச்சியாக்கி எடுத்த சென்ற மர்ம கும்பல் மாட்டின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சின்ன செங்குன்றம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (53). விவசாயி. இவர் 20க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து அன்று மாலையே மாடுகள் வீடு திரும்பி உள்ளது. அதில் ஒரு பசு மாடு மட்டும் காணாமல் போனது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சங்கர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். எங்கு தேடியும் பசுமாடு கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கோவிந்தாபுரம் அருகே மட்டான ஓடை பகுதியில் உள்ள முட்புதரில் பசு மாட்டின் தோல் ஒன்று உள்ளதாக சங்கருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், அங்கு சென்று பார்த்தபோது, காணாமல்போன தனது பசு மாட்டின் தோல் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பசுமாட்டை திருடிய மர்ம நபர்கள் மாட்டை கொன்று அதிலிருந்து இறைச்சியை எடுத்துக்கொண்டு தோலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் சங்கர் அளித்த புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பசுமாட்டை திருடி இறைச்சி விற்பனை செய்த கும்பல் appeared first on Dinakaran.