பெரம்பூர்: ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு முதல் அரையாண்டு, இரண்டாவது அரையாண்டு என இரண்டு முறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய வரியை செலுத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பல்வேறு சிறப்பு முகாம்கள் மற்றும் நினைவூட்டல்களை செய்து வருகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு வரும் 30ம் தேதிக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் முதல் முறையாக 5% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் செலுத்தும் பணத்தில் 5% அவர்களுக்கு திருப்பி செலுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஒருவர் 30 ஆயிரம் ரூபாய் குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை கட்டுகிறார் என்றால், அவருக்கு ரூ.1500 மிச்சமாகும். அந்த வகையில் திருவிக நகர் மண்டல குடிநீர் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராதாகிருஷ்ணன், பகுதி பொறியாளர் பாக்கியலட்சுமி, துணைப்பகுதி பொறியாளர் சுரேஷ்குமார், கணக்கு அலுவலர் பாக்யா உள்ளிட்டோர் முகாமிற்கு வந்தவர்களுக்கு தற்போது குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்தும், பொதுமக்களுக்கு மிச்சமாகும் பணம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
The post 30ம் தேதிக்குள் குடிநீர் வரி செலுத்தினால் 5% தள்ளுபடி: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.