×
Saravana Stores

திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகள், படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவிலே ஒரு அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84) கடந்த 10ம் தேதி காலமானார். இந்நிலையில் முரசொலி செல்வத்தின் படத்திறப்பு-புகழஞ்சலி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முரசொலி செல்வத்தின் திருவுருப்படத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்து என்.ராம், சத்யராஜ், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், இந்து என்.ராம், மு.நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றினர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மைக்குக்கு முன்னால் நின்று பேசலாமா அல்லது தவிர்த்து விடலாமா என்கிற ஒரு இக்கட்டான சூழ்நிலையிலே ஒரு மனக்குழப்பத்திலே நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். முரசொலி செல்வம் மறைந்து விட்டார் என்பதை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிட போகிறாரா என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை, எனது தொண்டையை அடைத்து கொண்டிருக்கிறது. கடந்த 10ம் தேதி அவர் மறைந்து விட்டார் என்ற செய்தியை தம்பி தயாநிதி தான் முதன் முதலில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காலை 10 மணியளவிலே என்னிடத்திலே சொன்னார். அதிர்ந்து விட்டேன், நம்ப முடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக்குறைவும் கிடையாது. ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டு, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தார் என்பதும் இல்லை. எனவே, அப்படிப்பட்டவர் மறைந்து விட்டார் என்று சொல்வது, என்னால் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தை சேர்ந்திருக்கக்கூடிய அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் தவித்துக் கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு எல்லாம் மூத்த அண்ணனாக இருந்து அறிவுரைகளை, ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி கொண்டிருந்தார். கலைஞர் மறைவுக்கு பிறகு நம்முடைய பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் மறைவுக்கு பிறகு, நம்முடைய முரசொலி செல்வம் மறைவுக்கு பிறகு எனது மனது உடைந்து சுக்கு நூறாகியிருக்கிறது. அதில் இருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி, எண்ணி தவித்து கொண்டிருக்கிறேன்.

அவர் பெங்களூரில் போய் செட்டில் ஆன பிறகு, ஏறக்குறைய 25 ஆண்டு, 30 ஆண்டு காலம் ஆகிறது. ஆனால், மாதத்துக்கு ஒரு முறையாவது, இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது சென்னைக்கு வந்து விடுவார். 2 நாட்கள், 3 நாட்கள் தங்கியிருப்பார். அவர் சென்னைக்கு வந்தவுடன் அவர் வீட்டிற்கு சென்றுவிடுவேன். நான் மட்டுமல்ல அண்ணன் துரைமுருகன், இங்கே இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள், கழக முன்னணியினர் அத்தனை பேரும் போய் விடுவோம். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டு இருப்போம். கழகத்தின் முக்கியமான நிகழ்ச்சி மட்டுமல்ல, தேர்தல் பிரசாரம், தேர்தல் களத்திலே நின்று, அந்த பிரசாரத்திற்கு, நிகழ்ச்சிக்கு நாங்கள் போகின்ற போது, அந்த பிரசார கூட்டங்களை அல்லது அரசு நிகழ்ச்சி நடக்கின்ற அந்த நிகழ்ச்சிகளை, நான் கலந்து கொள்ளக்கூடிய அத்தனை நிகழ்ச்சிகளும் நேரடியாக தொலைக்காட்சியிலே ஒளிபரப்பு செய்வார்கள். அந்த நேரடி காட்சிகளை முழுமையாக பார்ப்பார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு நான் காரில் ஏறுவேன். முதல் போன் அவர் செல்போன் தான் அடிக்கும். எப்படி எல்லாம் பேசின. சிறப்பாக இருந்தது. ரொம்ப எழுச்சியாக இருந்தது. இன்னும் விரிவாக பேசியிருக்கலாம் என்று அறிவுரைகளை எல்லாம் சொல்வார். 100 கட்டுரைகள் எழுதி, அது புத்தகம் வடிவத்தில் வந்து இருக்கிறது.

எங்களை பற்றியும் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். உடன் படிக்கும் தோழர்கள் மாலை நேரங்களில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் காலம் செலவு செய்த நேரத்தில், கலைஞர் வீட்டு பிள்ளைகள், நான், தம்பி, அண்ணன், முரசொலியில் பகுதிநேர பணியாளர்களாக ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு நாங்கள் வேலை பார்த்தோம். படிக்கும் நேரத்தில் கூட பேப்பர் மடித்து கொண்டிருந்தனர். பொருள் ஈட்டும் நோக்கோடு முரசொலி நடத்தப்பட்டிருந்தாலும் கூட பரவாயில்லை. கலைஞர் ஈட்டிய பொருளையும் அது கரைத்து கொண்டிருந்தது. கலைஞர் குடும்ப இளைஞர்கள் அனைவரும், கலைஞர் ஊட்டிய லட்சிய வேட்கையில் தங்கள் இளமையை பறிகொடுத்து வந்தார்கள். பெரியார், அண்ணா வழியில் தான் ஏற்றுக்கொண்ட லட்சியம் நிறைவேற தன்னை மட்டுமல்ல, தன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் அந்த வழியில் பயணிக்க வைத்தவர் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒன்று எங்களுக்கு போதும். இதை நான் பொக்கிஷமாக நான் என்னுடைய மனதிலே பதிய வைத்து கொண்டிருக்கிறேன். முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவிலே ஒரு அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்குவது. அந்த பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தக்கூடிய முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்குவது என்று முடிவு செய்து இருக்கிறோம். இதைத் தொடர்ந்து நமது ஆசிரியர் வைத்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு, நிச்சயமாக ஆசிரியரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை சொல்லி, வாழ்க செல்வம் புகழ், வாழ்க செல்வம் புகழ் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட எம்பிக்கள், மயிலை த.வேலு, எழிலன், இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்: அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

முரசொலி செல்வம் படத் திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது: செல்வம் என்னைவிட்டு மறையவில்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நண்பர்களாக இருந்து வந்தோம். எங்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு வந்ததில்லை. எதிர்பாராத விதமாக அவர் மறைந்துவிட்டார். நட்புக்கோர் இலக்கணமாக திகழ்ந்தவர் செல்வம். அவர் விசித்திரமான மனிதராகவே வாழ்ந்துவிட்டு மறைந்தார். அவர் நினைத்திருந்தால் திமுகவில் பதவிகளை பெற்றிருக்க முடியும். உயரங்களை தொட்்டிருக்க முடியும். அவர் முரசொலிமாறனுக்கு தம்பி கலைஞருக்கு மருமகன் இருந்தாலும், அந்த உறவு முறையைப்பயன்படுத்தி எந்த பதவியும் பெற்றிருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லை ஆனால் அவர் விரும்பிய எல்லாருக்கும் உதவும் வகையில் கட்சியில் பதவி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை. தங்கள் குடும்பத்தை வைத்து அடையாளம் தேடாதவர். விளம்பரத்தை விரும்பாதவர். இறுதி வரை சரியாக இருந்தார்.

எந்த நிலையிலும் யாரிடத்திலும் எந்த உதவியும் பெறக்கூடாது என்ற திடமான முடிவுடன் இருந்தவர். பிறரிடம் சின்ன துரும்பைக்கூட பெறாதவர். அவர் நினைத்திருந்தால் பெரிய அளவில் வந்திருக்க முடியும். ஆனால் அவர் துறவி போல இருந்தார். கட்சியில் எதிர்ப்பே இல்லாத மனிதர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் செல்வம்தான். அவர் யார் உள்ளமும் புண்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தான் ஏற்றுக் கெண்ட பணியை சரியாக செய்பவர். எல்லாரையும் அடையாளம் கண்டு வைத்திருப்பார். அறிஞர் அண்ணா, செல்வத்தின் மீது அன்பும் பாசமும் கொண்டவர். அண்ணா முதல்வரானதும் அந்த காலத்து கதைகளை சொல்வார். அண்ணாவுக்கு வேண்டியதை எல்லாம் செல்வம்தான் செய்வார். அண்ணாவும் அவரைத் தான் அழைத்து பணிகள் கொடுப்பார். அந்த வகையில் எல்லாரிடமும் பாசமாகவும், பண்பாகவும் பழகியவர் செல்வம். மாணவர் சமூகத்தை நல்ல வழியில் உருவாக்குவதற்கு மூலகாரணமாக இருந்தவர் செல்வம். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

கலைஞர் குடும்பத்தில் முதல் நண்பர்: நடிகர் சத்யராஜ் பேச்சு

முரசொலி செல்வம் பட திறப்பு விழாவின் போது நடிகர் சத்யராஜ் பேசியதாவது: நான் முரசொலி படித்து வளர்ந்தவன். நடிப்பதற்கு சென்னை வந்த பிறகு தொடர்ந்து படம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கலைஞர் வசனத்தில் பூம்புகார் தயாரிப்பில் பாலைவன ரோஜாக்கள் படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படப்பிடிப்பு முரசொலி அலுவலத்தில் நடைபெற்றது, நாங்கள் பதற்றமாக இருந்தோம். அப்போது தான் முரசொலி செல்வம் அவர்களை சந்தித்து பேசினோம். முதல் சந்திப்பின் போதே அவர் பதற்றத்தை போக்கினார். வயது அதிகமாக இருந்தாலும் கலைஞர் குடும்பத்தில் எனக்கு முதல் நண்பர் முரசொலி செல்வம் தான். பாலைவன ரோஜாக்கள் படம் முழுவதும் கோபாலபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு நாள் இரவு படப்பிடிப்புக்கு கலைஞர் வந்தார், அப்போது அவர் இன்னும் சகஜமாக எங்களிடம் பழகினார்.

நான் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். ஆனால் 100 நாள் பாலைவன ரோஜாக்கள் திரைப்படம் ஓடியதற்கு முதல்முறையாக கலைஞர் கையால் கேடயம் வாங்கினேன். அதுமட்டுமின்றி வில்லனாக நடித்த படத்திற்கும் கலைஞர் கையால் தான் கேடயம் வாங்கினேன். முரசொலி செல்வம் எப்போதும் சிரித்துக்கொண்டே தான் இருப்பார். கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே சார் என்று அழைப்பேன். மற்ற அனைவரையும் அண்ணா, தம்பி என்று தான் அழைப்பேன். திடீர் என அவர் இறந்து போனது அதிர்ச்சியாக உள்ளது. முரசொலி செல்வம் புகழ் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post திராவிட இயக்கத்தை சார்ந்த படைப்புகள், படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Murasoli Selvam ,Union Minister ,Murasoli Selvam Foundation ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...