- மதுரை
- ஆந்திரா
- Maji
- அமைச்சர்
- திருமங்கலம்
- ஆந்திரா மாஜி
- அம்மன்னித்யா
- முன்னாள்
- ஜெகன் மோகன்
- ஆந்திரப் பிரதேச அமைச்சரவை
திருமங்கலம்: கொலை வழக்கில் தலைமறைவான ஆந்திரா மாஜி அமைச்சரின் மகனை, அம்மாநில போலீசார், மதுரை அருகே, சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில், சாலைப் போக்குவரத்து மற்றும் கட்டிட துறை அமைச்சராக இருந்தவர் பினிப் விஸ்வரூப். இவரது மகன் டாக்டர் பினிப் காந்த் (33). இவரை, அம்மாநிலத்தில் உள்ள அயனவில்லி பகுதியில், கடந்த 2022ல் நடந்த கொலை தொடர்பாக அம்மாநில போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், பினிப் காந்த் தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையிலான போலீசார் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி பகுதியில் பதுங்கியிருந்த பினிப் காந்த் அங்கிருந்து காரில் மதுரை வருவதாக ஆந்திர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது காரை பின் தொடர்ந்தனர். இதையறிந்த பினிப் காந்த் காரில் வேகமாகச் சென்றார். போலீசார் சினிமா பாணியில் அவரது காரை ‘சேஸிங்’ செய்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் எலியார்பத்தி டோல்கேட் பகுதியில் பினிப் காந்தின் காரை நள்ளிரவு 1 மணியளவில் மடக்கிய போலீசார், அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அருகில் உள்ள கூடக்கோவில் போலீசார் மற்றும் மதுரை எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கைது செய்த பினிப் காந்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று காலை திருமங்கலத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆந்திரா கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது.
The post மதுரை அருகே போலீசார் அதிரடி; கொலை வழக்கில் தலைமறைவான ஆந்திரா மாஜி அமைச்சரின் மகன் கைது; சினிமா பாணியில் ‘சேஸிங்’: நள்ளிரவில் பரபரப்பு appeared first on Dinakaran.