×
Saravana Stores

தேனையும்‌ பாகையும்‌ போலும்‌ பனிமொழியே!

சென்ற இதழில், உமையம்மையானவள் மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் அம்சமாகவே கருதப்படுகிறாள். இந்த மூன்று சக்திகளும் இயல்பு, குணம், ஆற்றல் போன்றவற்றால் தனித்திருந்தாலும் முத்து மாலையை அணிந்து கொள்வதில் மூவரும் ஒன்றுபோலவே தோன்று கின்றனர் என்கிறது சிற்ப சாத்திரம். மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் இணைவே சண்டி எனப்படுகிறாள், என்பதனைக் கண்டோம். இவ்விதழில், அதைச் சிறப்பாக சூட்டவே பட்டர் “முலைமேல் முத்து மாலையுமே’’ என்பதனைக் காணலாம். அலைமகளான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். அவள் அணிந்திருக்கும் முத்து மாலை அவளின் செல்வச் செழிப்பையும் வளத்தையும் காட்டுகிறது.

கலைமகளான சரஸ்வதி அணிந்திருக்கும் முத்து மாலை சுத்த வித்யா தத்துவத்தை விளக்கும் அறிவாக காட்சியளிக்கிறது.மலைமகளான பார்வதிதேவி அணிந்திருக்கும் முத்து மாலையானது, பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவையாவன பார்வதி இமவான் என்ற மலையரசனுக்கு மகளானதால் தெற்கத்திப் பகுதியில் விளையும் விலை மதிப்பு மிக்க அரச குலத் தவர் மட்டும் அணியும் இரத்தினத்தில் ஒன்றான முத்து மாலையை அணிந்துள்ளாள். இது அவளின் செல்வவளத்தை காட்டுகிறது.

மேலும், பார்வதியின் திருமணத்தின் போது தன் சகோதரன் விஷ்ணுவால் விரும்பிக் கொடுக்கப்பட்ட தாய்வீட்டு சீதனம். முத்துமாலையை கொண்டு மந்திரத்தை உபாசிப்பவர்கள் உமையம்மையின் அருளை விரைவில் பெறுவர் என்பது உறுதி. திருமால் தன் முத்துமாலையிலே அபிராமியை வழிபட்டார். இவையாவற்றையும் மனதில் கொண்டே பட்டர் “முலைமேல் முத்துமாலையுமே’’ என்கிறார்.

“அந்தமாக”

“பார்க்கும் திசைதொறும்’’ என்பதனால் உமையம்மையைச் சுற்றியுள்ள பத்துத்திசைகளையும்,
“பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்’’ என்பதனால் உமையம்மையின் பத்துத் திசையிலும் காவல் காக்கும் தேவதைகளையும்,
ஆயுதங்களையும்,
“என் அல்லல் எல்லாம் தீர்க்கும்’’ என்பதனால் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சி அளிக்கும் பண்பையும்,
“திரிபுரையாள்’’ என்பதனால் முச்சூலத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் கன்னியாக கொற்றவையையும்,
“திருமேனியும்’’ என்பதனால் அபிராமி அம்மையையும்,
“சிற்றிடையும்’’ என்பதனால் பாலா திரிபுரசுந்தரியையும்,
“வார்க்குங்குமமுல்லையும்” என்பதனால் உமையம்மையின் கொடைப் பண்பையும் கருணைப் பண்பையும்,

“முலைமேல் முத்து மாலையுமே’’ அபிராமியையும் அவளே பத்து திக்கிற்கும் உள்ள அனைத்து தேவதைக்கும் உணவளித்து அனைத்து உயிரினங்களுக்கும் உடல் நலனையும், உயிர் நலனையும், அருள்வதையே இப்பாடலில் விளக்குகிறார். வீதிக்கு வந்து அஸ்திர தேவதையின் மூலமாக அனைத்து திக்கிலுள்ளோருக்கும் பலி சாய்கும் பூசனையை பதிவு செய்வதால் அதை செய்து அப்பயனை பெற முயல்வோம்.

அடுத்த பாடலுக்கு செல்வோம்…
“மால்‌ அயன்‌ தேட மறைதேட வானவர்தேட நின்ற
காலையும்‌, சூடகக்‌ கையையும்‌ கொண்டு, கதித்தகப்பு
வேலைவெங்காலன்‌ என்மேல்‌ விடும்போது வெளிநில்கண்டாய்‌
பாலையும்‌ தேனையும்‌ பாகையும்‌ போலும்‌ பனிமொழியே!’’
– எண்பத்தி ஆறாவது அந்தாதி

“ஆதியாக”

இப்பாடலின் மூலம் திருவண்ணாமலையில் நடந்த இரண்டு தல வரலாற்றுக் குறிப்புகளையும், திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமிபட்டர் உணர்ந்த இறப்பு சடங்கு ஒன்றை பற்றிய குறிப்பையும் வெளிப்படுத்தி தன்னை காலனிடத்திலிருந்து காப்பாற்ற வேண்டுகிறார். புராணங்களை நன்கு அறிந்து அதன் வழி இப்பாடலை நோக்க வேண்டும்.
பண்டைய காலத்தில் அரசர்களிடத்து தீர்ப்பு பெறுபவர்கள் முன்னர் அரசர் அளித்த தீர்ப்பை சூட்டிக்காட்டி அதன் வழி ஒரு நியாயத்தை புலப்படுத்தி தனக்கு அவ்வாறு வேண்டுவது போல இப்பாடல் அமைந்துள்ளது. இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற காலையும்
சூடகக் கையையும் கொண்டு
கதித்த கப்பு வேலை வெங் காலன் என்மேல் விடும்போது
வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே
இவ்வரிசையின் வழி பாடலின்
விளக்கத்தை இனி காண்போம்.

“மால் அயன் தேட மறைதேட வானவர்தேட நின்ற காலையும்’’ “மால்’’ என்பதனால் பெருமாள் இருக்கை கூப்பி வணங்கிய நிலையில் சங்கு சக்கரத்துடன் இருக்கும் ரூப தியானத்தை அல்லது பன்றியின் வடிவையும், “அயன்’’ என்பதனால் இரு கை கூப்பிய நிலையில் கிண்டி அக்ஷமாலையுடன் நான்கு தலையுள்ள பிரம்மாவின் ரூபத்தையும் அல்லது
அன்னப்பறவையின் வடிவத்தையும், “தேட’’ என்பதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் தங்களுக்குள் சிறந்தவர் யார்? என்று வாக்குவாதத்தில் ஆரம்பித்த கருத்து வேறுபாடானது மெல்ல போராக மாறி பல ஆண்டுகாலம் நீடித்தது. படைக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும் பல்வேறு பொறுப்புகளிலிருந்து விலகி போர் மேற்கொண்டனர். அதன் விளைவால் பதினான்கு உலகங்களும், தேவர்களும் மற்றும் அசுரர்களும்கூட துன்புற்றனர்.

அவர்கள் அனைவரும் இதற்கு தீர்வு தேடி சிவபெருமானை நாடினர். அவர் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்குமுள்ள உயர்வு தாழ்வை சரிசெய்ய இருவருக்கும் இடையில் அழல் பிழம்பாக தோன்றி உங்கள் இரு வருள் எவர் என் பாதத்தையோ தலையையோ முதலில் தரிசிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்றார்.

அந்த சவாலை எதிர்நோக்கி விஷ்ணுவானவர் பன்றி வடிவம் எடுத்து பூமியைத் தோண்டி கீழ்நோக்கிச் சென்று அந்த ஜோதியின் திருவடியை காண முயன்றார். பிரம்மாவானவர் அன்ன வடிவம் எடுத்து மேல் நோக்கி பறந்து முடியைக் காண விழைந்தார். முடிவில் விஷ்ணுவானவர் திருவடியைக் காண முடியவில்லை என்று தோல்வியுற்று சிவபெருமானிடம் சரணடைந்து
தோல்வியை ஒப்புக்கொண்டார்.

மேல் நோக்கிச் சென்ற பிரம்மதேவனோ சிவபெருமான் முடியிலிருந்து நழுவிய தாழம்பூ பூமியை நோக்கி கீழே விழுந்துகொண்டிருந்ததைக் கண்டார். அந்த தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். தாழம்பூவானது தான் சிவபெருமானின் சடைமுடியிலிருந்து விழ ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று என்று முடியில், தான் இந்த இடத்தில் இருந்தேன் என்ற உண்மையை கூறிற்று. பிரம்மாவானவர் விஷ்ணுவின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சிவனிடம் தோற்றாலும் தோற்கலாம் விஷ்ணுவினிடத்தில் தோற்றுவிடக் கூடாது என்று ஒரு சூழ்ச்சி செய்தார்.

அந்த தாழம்பூவிடம் வரும் வழியில் நான் உன்னை கண்ட இந்த இடத்துடன் திரும்பி உன்னுடனேயே கீழ்நோக்கி வருகிறேன். எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். தாழ்ந்த நிலையில் உள்ள தாழம்பூ தன்னை உயர்த்தி பேசியதில் மனம் மயங்கி பொய் சொல்ல ஒத்துக் கொண்டது. சிவனின் தலைமுடியில் இருக்கும்போது பிரம்மா என்னைக் கண்டார் என்று பிரம்மா தன்னை காணாத போதும் கண்டார் என்று பொய் உரைத்தது. அனைத்தும் அறிந்த சிவபெருமான் உண்மையைக் கூறி சரணடைந்த திருமாலுக்கு வரமளித்து உயர்த்தினார். பொய் கூறிய பிரம்மாவை சாபமளித்து தாழ்த்தினார் என்கிறது திருவண்ணாமலை தலபுராண வரலாறு.

“மால் அயன் தேட மறை தேட” என்ற வார்த்தையால் லிங்கோத்பவரை குறிப்பிடுகிறார். மேலும் இந்திரனானவன் அந்த ஜோதியைக் கண்டு நான் அதை வெல்லுவேன் என்று விரைவாக வந்தான். அந்த ஜோதியின் அருகில் ஒரு பெண் குழந்தை நின்றுகொண்டிருந்தது. இந்திரா இந்த துரும்பை உன்னால் அசைக்க முடியுமாயின் அந்த ஜோதியிடம் நீ போரிடலாம் என்று கூறி ஒரு அறுகம்புல்லை அவன் முன் வீசி எறிந்தது. அவன் அதை வஜ்ராயுதத்தால் வெட்டியும் ஒரு சிறிதும் சிதைவு அடையவில்லை. அவன் ஆளுமையின் கீழ் உள்ள அக்னியை எரிக்கச் சொன்னார். அது முன்பை விட பசுமையானது வாயுவை கூப்பிட்டு அதை பரக்க வைக்க சொன்னார். அது ஒரு துளியும் அசைக்கவில்லை. வருணனை அழைத்து அதை நனைக்க சொன்னார் நீர் முழுதும் வற்றிப்போயிற்று. அனைத்து தேவர்களும் தத்தம் ஆற்றலைக்கொண்டு அதை தாக்க முயன்றனர்.

ஆனால், யார் ஒருவராலும் அந்த அறுகம்புல்லை ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போதுதான் அந்த குழந்தையை உற்றுநோக்கினார்கள். குழந்தை வடிவில் வந்த உமையம்மை தன்னை யார் என்று அறிவித்து அழல் ஜோதி யார் என்றும் காட்டியது. யாவரும் வந்திருப்பது சிவபெருமானும் உமையம்மையுமே என உணர்ந்து தங்கள் தவறுக்கு மன்னிப்பு வேண்டினர். அந்த அறுகம்புல்லில் மறைந்திருக்கிற ரகசியம் யாது என்று தேவர்களால் தேடப்பட்டதையே “மறை தேட வானவர் தேட’’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். அனைவரும் தேடியது சிவபெருமான் காலை அதை சூட்டவே “நின்ற காலையும்’’ என்கிறார்.

மேலும், “மறைதேட” வேதங்கள் புருஷ வடிவத்தில் நின்று வழிபட்ட ரூப தியானத்தையும் வேதாரண்யம் வேதகிரி என்ற தளத்தில் உள்ள இறைவனையும் குறிப்பிடுகிறார்.
“வானவர் தேட” என்பதனால் அமுதத்தை அனைவரும் பருகும் நேரத்தில் திருமாலை காணவில்லையே என்று வானவர்கள் தேடிக் கொண்டிருக்க திருமாலோ தேவர்களை காத்து அசுரர்களை அமுதம் பருகாமல் தடுத்து அருள் புரிய யாவரும் அறியா வண்ணம் ஒரே நேரத்தில் பரமனின் கண்ணுக்கு காதலியாகவும், தேவர்கள் கண்ணிற்கு தாயாகவும், அசுரர் கண்ணுக்கு பேரழகியாகவும் தோன்ற பெண் வடிவம் ஏற்றார். அந்த வடிவத்திற்கு மோஹினி என்ற பெயர். இதை வழுவூரில் இன்றும் காணலாம். அனைவரும் அறியாமல் தேட நின்றதால் “வானவர் தேட’’ என்றார் பட்டர்.

ஆகமம் இந்த வடிவத்தை பிட்சாடன ரூபத்தின் சக்தி மோஹினி என்கிறது. படைப்புத் தொழிலை எப்படி செய்வது என்று பிரம்மா கேட்டதற்கு ஒரு வில்வ விதையைக் கொடுத்து இது ஒரு முகூர்த்த நேரத்தில் எங்கு முளைக்கிறதோ அங்கு படைக்கும் ஞானம் உனக்கு ஏற்படும் என சிவன் வரமளித்தார். அந்த இடத்தை பிரம்மா தேட, வானவர் அனைவரும் அமுதம் வைத்த இடத்தில் லிங்கம் இருக்க அமுதத்தை காணாது தேடும் இந்த நிகழ்வையே “தேட’’ என்கிற வார்த்தையால் குறிப்பிடுகிறார் பட்டார். சிவன் மார்கண்டேயருக்கு திருநீலக்குடியில் வாக்களித்தபடி எமனை உதைத்த கால சம்ஹார மூர்த்தியின் இடது காலையே “காலையும்’’ என்றார். இவையாவற்றையும் இணைத்தே “மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற காலையும்’’ என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post தேனையும்‌ பாகையும்‌ போலும்‌ பனிமொழியே! appeared first on Dinakaran.

Tags : Highlander ,
× RELATED அனைத்துக் கலைகளுக்கும் கலைமகளே