×
Saravana Stores

அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம்: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மீது எடப்பாடி கடும் தாக்கு

நெல்லை: அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நீக்கியவர்களை சேர்க்கவே முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு கட்சி தொடக்க விழா நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். கட்சி விரோதமாக செயல்பட்டவர்கள் (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) அகற்றப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். அதனால் ஒன்னா போச்சு, இரண்டாக போச்சு என்ற கேள்வியை தயவுசெய்து ஊடகங்கள் விட்டு விடுங்கள். நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான்’ என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மறுநாள் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதா மறைவிற்கு பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோக கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்வர் பதவியில் அமர்த்தியவர், முதல்வர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.

இந்த துரோக செயல் காரணமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி தற்போது 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட ‘துரோகம்’ தியாகத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும்’ என்று கூறினார். இதேபோல், ‘சர்வாதிகாரி என்கிற எடப்பாடி அதிமுகவை அழித்துவிடுவார்’ என்று டிடிவி.தினகரன் கூறினார். ‘அதிமுக தற்போது சரியாக இல்லை’ என்று சசிகலாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று 53வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் ஜெயலலிதாவும் பல இன்னல்களை சந்தித்தார். அந்த இரு தலைவர்களும் அனைத்து சோதனைகளையும் முறியடித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதேபோல்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ஆனால் கட்சிக்குள்ளேயே இருக்கும் சில எட்டப்பர்கள் (ஓபிஎஸ், சசிகலா, டிடிவி) சதி திட்டங்களை தீட்டி எனது ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைத்தார்கள்.

அப்படிப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து உயர்ந்த பதவிகளை கொடுத்தேன். ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் இன்று அதிமுக வலுவோடு இருக்கிறது. அது இரண்டாக மூன்றாக உடைந்து விட்டது என்று சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காகவும் நான் முதலமைச்சராவதை தடுப்பதற்காகவும் அந்த எட்டப்பர்கள் தொடர்ந்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக என்ன செய்தார்களோ அதேபாணியில் இப்போதும் இடையூறு செய்கிறார்கள்.

அதிமுக வலிமை குறைந்துவிட்டது என்று ஒரு சில ஊடகங்கள் மதிப்பிடுகிறது. ஆனால் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைவிட 2024ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் சொந்த காலில் நிற்கிறோம், நமக்கு தான் பலம் அதிகம். எனவே வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்ற நிலையில் அவரை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலாவால் எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். ஆனால், தற்போது மக்களால் முதல்வராக்கப்பட்டேன் என்று எடப்பாடி பேசி உள்ளதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

The post அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம்: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மீது எடப்பாடி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,DTV ,Paddy ,T. ,Eaters ,D. V. ,EDAPPADI PALANISAMI ,DINAKARAN ,OBS ,Aiters ,
× RELATED 2026-ல் அதிமுக ஆட்சி அமையும்: மதுரையில் வி.கே.சசிகலா பேட்டி!