×

ரூ.35 கோடி பொருட்களுடன் கன்டெய்னரை திருடிய வழக்கில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி பொருட்களுடன் கன்டெய்னரை திருடிய வழக்கில், தனியார் ஷிப்பிங் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஐடிபிஎல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து கன்டெய்னரில் வரும் சரக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பது இந்த நிறுவனத்தின் பிரதான வேலை.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு சீனாவில் இருந்து 40 அடி கன்டெய்னரில் ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப், நோட் பேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. இது கடந்த செப் 7ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்த கன்டெய்னரை ஏற்றி வர பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த செப்.11ம் தேதி டிரைலர் லாரியை அனுப்பியது.

டிரைலர் லாரி டிரைவர் சிஐடிபிஎல் நிறுவனத்தின் யார்டுக்குச் சென்று பார்த்தபோது கன்டெய்னரை காணவில்லை. இது தொடர்பாக தன்னை அனுப்பிய பெங்களூரு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தனியார் நிறுவன அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை கையாளும் சிஐடிபிஎல் நிறுவன உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்த கன்டெய்னர் எங்கே போனது என விசாரித்தனர்.

இது தொடர்பாக சிஐடிபிஎல் நிறுவன ஆபரேஷன் மேலாளர் பொன் இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கன்டெய்னர் ட்ராக்கிங் ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபோது, வேறொரு டிரெய்லரில் கன்டெய்னர் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் சிஐடிபிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் இளவரசன் திருட்டு கும்பலுடன் சேர்ந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து துறைமுகம் காவல் ஆய்வாளர் சிலம்பு செல்வன் தலைமையிலான போலீசார், திருவள்ளூர் மணவாளன் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக டிரெய்லர் லாரி உரிமையாளர் திருவள்ளூர் மணிகண்டன் (30), லாரிகளை ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்களான திருவொற்றியூர் ராஜேஷ் (39), நெப்போலியன் (46), சிவபாலன் (46), திண்டுக்கல் முத்துராஜ் (46), டிரைலர் லாரி டிரைவர் விழுப்புரம் பால்ராஜ் (32) ஆகிய 6 பேரை கைது செய்து கடந்த மாதம் 20ம் தேதி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், சிஐடிபிஎல் நிறுவன ஊழியர் இளவரசன், இடைத்தரகர் சங்கரன், டெக்கான் தயாரிப்பாளர் விக்கி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். கைதான முத்துராஜ் என்பவரை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். முத்துராஜ் கொடுத்த வாக்குமூலத்தின்படி தலைமறைவாக இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் சங்கரன் (56) என்பவரை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி சிஐடிபிஎல் நிறுவன ஊழியரான இளவரசன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ரூ.35 கோடி பொருட்களுடன் கன்டெய்னரை திருடிய வழக்கில் ஷிப்பிங் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Chennai port ,CITPL ,Mylapore ,Dinakaran ,
× RELATED கடந்த டிசம்பரில் 5.236 மி.மெ. டன்...