- தாம்பரம்
- தம்பிராமம் கழகம்
- பல்லாவரம்
- அனகாபுத்தூர்
- பம்மல்
- Sembakkam
- Perungalathur
- கார்ப்பரேஷன் நிர்வாகம்
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ என்ற மக்களுக்கான புகார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் இது முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன.
இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் குறைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகங்கள், அல்லது மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று புகார் தெரிவிக்கும் நிலை இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர்.
மாநகராட்சிக்கு என உள்ள கட்டணமில்லா இலவச எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என்ற நிலை இருந்தாலும், அதில் சில குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் எழுந்தது. இந்நிலையில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ என்ற புதிய செயலியை தாம்பரம் மாநகராட்சி உருவாக்கியுள்ளது.
இந்த செயலி மூலம் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குடிநீர், சாலை, தெருவிளக்கு, வருவாய் இனங்கள், தெருநாய்கள், குப்பைகள், கொசுக்கள், மழைநீர் கால்வாய்கள் போன்ற பல்வேறு புகார்களை புகைப்படங்களுடன் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் பொதுமக்கள் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து செயலியிலேயே கண்காணித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த செயலியை கியூஆர் கோடு மூலம் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்படுத்த முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் செயலி பயன்பாட்டில் உள்ளது. செயலியை கடந்த 15ம் தேதி பல்லாவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் கே.என்.நேரு பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தற்போது சோதனை அடிப்படையில் உள்ள இந்த செயலி இரண்டு, மூன்று நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிந்துகொண்டு அவற்றுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வாய்ஸ் ஆப் தாம்பரம் என்ற செயலி மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சோதனையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் இந்த செயலி இரண்டு, மூன்று நாட்களுக்குள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் காலத்தில் ஐஓஎஸ் செல்போன்களிலும் செயலி பயன்பாட்டிற்கு வரும்,’’ என்றார்.
* அலைச்சல் குறையும்
பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சியில் உள்ள குறைகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவிக்க மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள், ஊழியர்களை சந்தித்து புகார்கள் தெரிவிக்கும் நிலை இருந்தது. இதற்கு அலைய வேண்டும். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலி மூலம் குறைகள் மற்றும் புகார்களை புகைப்படங்களோடு பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களின் அலைச்சல் குறையும்’’ என்றனர்.
* உடனடி தீர்வு
இந்த செயலி மூலம் பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது, குடிநீர் வராமல் இருப்பது, நாய், மாடு, பன்றிகள் தொல்லை, கொசுத்தொல்லை, கால்வாய் அடைப்புகள், பேரிடர் காலங்களில் தேவைப்படும் உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் போன்ற மாநகராட்சி சம்பந்தமான அனைத்து விதமான குறைகள், புகார்கள், கோரிக்கைகளை உடனுக்குடன் தெரிவித்து அதற்கான தீர்வை காணலாம். இதற்காக தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கன்ட்ரோல் ரூம் அமைக்கப்படுகிறது. இந்தபணி முழுமையாக நிறைவடைந்ததும் செயலி முழுமையான பயன்பாட்டிற்கு வர உள்ளது.
The post பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய வசதியாக ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ புதிய செயலி அறிமுகம்: மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு appeared first on Dinakaran.