சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி, சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலர் (கார்டு), பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சேர்ந்த 40 ரயில்வே அலுவலர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. அப்போது 40 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விசாரணையில், பாக்மதி விரைவு ரயிலுக்கு முன்பாக சூலூர்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் மூன்று நிமிடத்திற்கு முன்பு சென்றுள்ளது. 3 நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை சுழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் மூலம் போல்ட், நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடங்களானது. சூலூர்பேட்டை ரயில் சென்ற பிறகு மூன்று நிமிட இடைவெளிக்குள் போல்ட் நட்டுகளை முழுமையாக கழற்றி இருக்க வாய்ப்பில்லை.
மற்றொரு கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறு சிறுப் பகுதியாக கழற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கவரப்பேட்டை விபத்துக்கு முன்பு பொன்னேரியில் 3 முறை தண்டவாளத்தின் பாகங்கள் கழன்று கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே ஊழியர்களில் யாரோ ஒருவரோ, முன்னாள் ஊழியரோ, துறையில் பயிற்சிபெற்ற நபர்களோ செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தண்டவாள போல்டுகளை திருடி இருக்கலாம் என்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஏற்கனவே வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில், ரயிலை கவிழ்க்க சதி செய்வது தொடர்பான, இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150ன் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கவரப்பேட்டை ரயில் விபத்து மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.